துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா


குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]


பொருள்
துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

துன்னாத் - நம்மை அன்புடன் அணுகாதவர்

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

துறந்தாரை  துறந்தார் - துறந்தவர்கள்

நெஞ்சத்துநெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

உடையேமா - உடைதல் - கொண்டது, உடைதல், இருக்கும், கொள்வோமாயின்

இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும்

இழத்தும் - இழ-த்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).  

கவின் - அழகு

முழுப்பொருள்
ஏ நெஞ்சமே! நம்மை விரும்பாமல் நம்மை விட்டு பிரிந்து (நம்மை துறந்து) சென்ற தலைவர் நம்மிடம் வந்து இன்னும் சேரவில்லை. நம்மிடம் வந்த அன்பு செலுத்தாமல் கூடாமல் இருக்கிறார். அதனால் நான் வாடிக்கொண்டு இருக்கிறேன். எனது உறுப்புகளும் நலன் இழந்துவிட்டன. அத்தகையவரை நீ இன்னும் நெஞ்சில் வைத்து சொந்தம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறாய். இப்படிச்செய்வதால் துன்பத்தால் மேலும் வாடி உன் அழகை மேலும் இழப்பாய். இவ்வாறு நெஞ்சிடம் கூறுகிறாள் தலைவி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். ('குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

No comments:

Post a Comment