செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து


குறள் 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லான் - தன்னுடைய நிலத்தில் அன்றாடம் பாடுபடச் செல்லாது இருப்பான்

நிலக்கிழார் - நிலத்துக்குஉரியவர்.
கிழவன் - உரியவன்; தலைவன்; மருதநிலத்தலைவன்; அகவைமுதிர்ந்தவன்; எண்ணெய்க்கசடு; பரணி.
கிழவன் இருப்பின் – நிலக்கிழானாகிய விவசாயி

இருப்பின் - இருந்தால் - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

இல்லாளின் - இல்லாள் -  மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

ஊடுதல் -  புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.

ஊடிவிடும் - மனைவி கோபங்கொண்டு வெறுத்து விடுவாளோ அது போல.

முழுப்பொருள்
நிலத்திற்கு உரியவன் (நிலக்கிழான்), விவசாயி அன்றடம் விவசாயம் செய்யாமல், நிலத்தில் உழவு செய்து பயிர்விளைவிக்க செல்லாமல் சோம்பித் திரிந்தால் என்ன ஆகும் தெரியுமா? கோபித்துக்கொண்டு ஊடி கணவனைவிட்டு விலகி இருக்கும் மனைவியைப் போல நிலமும் தனது வெறுப்பை காண்பிக்கும். எப்படித்தெரியுமா? நிலம் வெறுப்புற்று பலன் தராமல் தரிசாகிவிடும். பாடுபடாத நிலம் மும்மாரி பொழிந்தாலும், முப்போகம் விளையக்கூடியதாயிருந்தாலும், மெல்ல அருகி (நொந்து) இறுதியில் பாழாகி தரிசு நிலம் போன்றே ஆகிவிடும். 

ஆதலால் உழவிற்கு நிலமும் மழையும் இருந்தால் மட்டும் போதாது. விவசாயியும் விவசாயியின் சோம்பித்திரியாமல் உழவு செய்கிற உழைப்பும் தேவை. 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும். (செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும். இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

No comments:

Post a Comment