இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்


குறள் 1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
இடுக்கண் -  மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை

கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

கொன்றிட - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

அடுத்து -  அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.

ஊன்றும் - ஊன்றுதல் - நிலைபெறுதல்; சென்றுதங்குதல்; நடுதல்; நிலைநிறுத்துதல்; பற்றுதல்; தீண்டுதல்; தாங்குதல்; முடிவுசெய்தல்; அமுக்குதல்; தள்ளுதல்; உறுத்துதல்; குத்துதல்;

நல் - நல்ல, மிகுந்த

ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன் காலாள் கணவன் தொண்டன் ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம் அரசு தொட்டால்வாடி பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி.

இலாத - இல்லாத

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
.

முழுப்பொருள்
துன்பங்கள் வரும் பொழுது அவற்றை முட்டுக்கொடுத்துத் தாங்கும் நல்ல குடும்பத்தலைவர்கள் நல்ல பிள்ளைகள் இல்லாத ஒரு குடும்பம் வீழும். அது எப்படிப் பட்டது தெரியுமா ?? எவ்வளவு பெரிய அல்லது சிறிய மரமானாலும் அதன் அடியில் கோடாரிக்கொண்டு வெட்டினால் சாய்ந்து வீழ்வதுப்போலாகும்.

ஆதலால் வாழ்வாதாரங்களானது முறிபடும்போது, ஊன்றுகோலெனத் தாங்கிப்பிடிக்க ஒருவர் வேண்டும். குடியைத்தாங்கி வழி நடத்த உயர்த்திப்பிடிக்க மனஉறுதியும் திறமையும் செயலின்கண் கவனமும் ஒருவருக்கு வேண்டும். 

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”இவனே
முழுமுதல் தொலைந்து கோளி யாலத்துக்
கொழிநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாயந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ” (புறநா 58:5)

“சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைக்கண் தோன்றில்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்” (நாலடி 197)


பரிமேலழகர் உரை
இடுக்கண்கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம். (முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார், 'தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன ஓங்குகுலம் நைய அதனுட் பிறந்த வீரர் தாங்கல் கடன்' (சீவக.காந்தருவ-6) என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்: பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம்.  (நவியம்-கோடரி). இது குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

No comments:

Post a Comment