அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

 

குறள் 768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்
[பொருட்பால், படையில், படைமாட்சி]

பொருள்
அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.

தகையும் - தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.
தகை - (வி)தடுத்துவிடு; ஆணையிடு.

ஆற்றலும் - ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்

தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத்திரைச்சீலை; முசுண்டிஎன்னும்ஆயுதம்.

படைத் - படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.
படை - (வி)உண்டாக்கு; படைஎன்ஏவல்.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

யான் -  தன்மையொருமைப்பெயர்

பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

பெறும் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்

முழுப்பொருள் 
போரில் வெற்றிப் பெறக்கூடிய வலிமையும் ஆற்றலும் முயற்சியும் ஒரு படைக்கு இல்லையென்றாலும் அப்படை போருக்கு தேவையான அளவில் எல்லாவித படைகளைக்கொண்டு இருந்தாலும் தேவையான அளவு எண்ணிக்கையில் இருந்தாலும் அதுவே அப்படைக்கு பயனை தரும். பெருமையை தரும். 

எப்படி இது சாத்தியமாகும்? ஏனெனில் ஒரு நாட்டிற்கு படை இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் வந்து போர் தொடுத்தோ அல்லது கோட்டையை கைப்பற்றியோ அந்நாட்டை கப்பம் கட்ட வைக்கலாம். ஆனால் அங்கு பெயருக்கு என்று ஒரு படை இருந்தால் கூட பகைவர் நம் நாட்டை தாக்க சற்று யோசிப்பர். ஏனெனில் ஒரு படை பெரும் குழுவாக இருக்கும் பொழுது நெருக்கடி நேரத்தில் நாம் பெரும்திரள் ஆதலால் நம்மை யாரும் வெல்தல் அரிது என்னும் சிந்தனையே வலிமையை தந்து ஊக்கம் பிறந்து எதிரிகளை தாக்க முடியும். ஆனால் அதற்கு முதலில் அங்கு ஒரு படை தேவைப்படுகிறது. 

காட்டுக்கு ராஜாவாக ஒரு புலியோ சிங்கமோ இருந்தாலும் ஒரு யானையிடம் சென்று சண்டையிடாது ஏனெனில் யானையின் தோற்றமே புலிக்கும் சிங்கத்துக்கும் அச்சத்தை உண்டு பண்ணும். தன் ஊக்கத்தினால் புலியும் சிங்கமும் யானையை சீண்டுவது வேறு கதை. ஆனால் யானை தோற்றத்திற்கு புலியும் பயப்படுகிறது என்றென்பதே நாம் கவனிக்க வேண்டியது.

அதுப்போல் ஒரு பாம்பு நம்மை கொத்தவேண்டும் என்றில்லை, சீறினாலே பொதும் நாம் பயப்படுவோம். அதுப்போல ஒரு படை மிகுந்த வலிமையுடன் இருந்தால் நன்று. ஆனால் எல்லா காலங்களிலும் அப்படி இருந்துவிட முடியாது. ஆனால் படை என ஒன்று இருந்தால் குறைந்த பட்சம் சீறுவதற்காவது பயன்படும். 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
தானை - தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும் - பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும் - தன்தோற்றப்பொலிவானே பெருமை எய்தும். ('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.).

மணக்குடவர் உரை
பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது படையழகினால் பெருமைபெறும்.படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்.இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.

No comments:

Post a Comment