கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

 

குறள் 729
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]

பொருள்
கல்லாதவரின் - கற்காதவர் (கற்காதவராக இருப்பினும்),  நெறிநூல்கள் கல்லாதவர்

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

என்ப - என்பார்கள்; எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

கற்று கற்கை; படித்தல்; நூல்கள் பயின்று

அறிந்தும் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர்

அவை  - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அஞ்சுதல் -  பயப்படுதல்

அஞ்சுவார் - பயப்படுவார்; அச்சம் கொள்வார் 

முழுப்பொருள் 
நூல்கள் கற்றிருந்தும் கல்வி பயின்ற கற்றோர்கள் (என சொல்லிக்கொள்வோர்), கற்றோர்கள் சான்றோர்கள் அறிஞர்கள் கூடியுள்ள அவையில் பேச / உரைக்க அஞ்சினால் (கற்றதனால் என்னபயன்? என்பது மட்டும் இன்றி) அவர்கள் கல்லாதவர்களை காட்டிலும் கீழானவர்கள். 

ஏனெனில் கல்லாதவர்கள் எதனையும் கற்கவில்லை ஆதலால் கற்றபிக்கும் ஆசிரியரின் நேரத்தை அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கற்கும் ஒருவர் ஆசிரியரின் நேரத்தை எடுத்துக்கொள்கிறார் தனது நேரத்தையும் செலவிடுகிறார். ஆனால் சரிவர கற்காததனால் நன்றாக பேச முடியாமல் அவையை அஞ்சுகிறார். ஆதலால் தனது நேரத்தையும் பிறர் நேரத்தையும் வீண் செய்தலால் அவர் கல்லாதவரைவிடவும் கீழானவர். தானும் கல்வியால் பயன்பெறாது பிறருக்கும் பயனில்லாமல் இருப்பதால் அவர் கல்வித்துன்பம் எய்தி நிற்பதால் (துன்பத்தை சுமப்பதால்) கல்லாதவரைவிடவும் கீழானவர். மேலும் கற்காதவர் முன்னிலையில் கற்றவர்களின் மானத்தை வாங்குகிறார். அதனாலும் கீழானவர்.  

கற்றிருந்தும் கற்றோர் அவையில் பேசுதற்கு அஞ்சுபவரை கோழைகளென்றும், அவர்களின் அறிவு வீரமில்லா பேடியின் கை வாளென்றும் கூறி, பின்னர் அவர்கள் கற்ற கல்வியால் பயன் யாதென்று வினவி, இக்குறளில் அவர்கள் கல்லாத மூடரைவிட கீழானவர் என்று சொல்லி அவைக்கஞ்சாமையை வலிமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கழறும் அவைஅஞ்சான் கல்வி இனிதே” (இனியவை 13)

பரிமேலழகர் உரை
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப - உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர். (அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.). 

மணக்குடவர் உரை
கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர்; உலகநூல் கற்றறிந்துவைத்தும் நல்லாரிருந்த அவையின்கண் சொல்லுதலஞ்சுவார். இது கல்லாதவரினும் இகழப்படுவரென்றது.

மு.வரதராசனார் உரை
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.

Thirukkural - Management - Public Speaking - Fear of speaking 
Even if a person has learned, according to Kural 729, from many books and other resources, but afraid of speaking in the presence of educated and wise people, he will be considered less educated than people who are not educated.

The world will rate the tongue-tied scholar 
As worse than the ignorant. 

Thorough or proper learning for a person is gaining the ability to put across his views convincingly and courageously in the presence of educated people. 

No comments:

Post a Comment