பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

 

குறள் 709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள் 
பகைமையும் பகைமை - எதிர்ப்பு

கேண்மையும் - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உரைக்கும் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

கண்ணின் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வகைமை - வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணர்வார்ப் - உணர்ந்து (அதன் படி நடப்பவர்)

பெறின் பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள் 
ஒருவர் பகையுணர்வுடன் இருக்கிறாரா பேசுகிறாரா அல்லாது நட்புணர்வுடன் இருக்கிறாரா பேசுகிறாரா என்பதை ஒருவருடைய கண்கள் உரைக்கும். மனதில் இருப்பதை உரைக்கும் அவ்வலிமை கண்களுக்கு உண்டு. ஆதலால் கண்களின் இயல்பறிந்து அகமொழியின் கூறுபாடு தன்மை அறிந்து கண்களின் வேறுபாடறிந்து ஒருவரால் உணர முடியும். அவ்வாறு கண்களின் குறிப்பறிய உணரக்கூடியவரைப் பெற்றால் ஒரு அரசருக்கு மிக ஏதுவாக இருக்கும் ஏனெனில் கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கு அல்லது பிறர்க்கு அரிது அன்று. 

நாலடியார் பாடலொன்று இவ்வாறு செல்கிறது.

ஆற்றும் துணையும் , அறிவினை உள்அடக்கி 
ஊற்றம் உரையார் உணர்வு உடையார், ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு. (நாலடி 196)

இப்பாடலின் கருத்து இக்குறளின் கருத்தினை ஒட்டி வருவது. பேரறிவு கொண்டோர் ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை அச்செயலை செய்து முடிக்கும் வழிமுறைகளை வெளிப்படுத்தார். எவருக்கும் தெரியாத வகையில் உள்ளத்தே வைத்து செயல் முடிப்பார். மேலும், பிறர் கொண்ட முயற்சிகளை அவரவருடைய முகம், கண் ஆகியவற்றின் அசைவுகளால் , ஆராய்ந்து அறியவல்ல நல்லறிவு உடையாரது குறிப்புக்குப் பணிந்து நடப்போர் உலகத்தவர். 

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”திருத்திய பளிக்கு வேதித் தெள்ளிய வேல்கள் என்னக்
கருத்தியல் புரைக்கும் உண்கண்” (கம்ப.ஊர்தேடு.107)

“வண்டுளர் அலங்கலாய் வஞ்சர் வாண்முகம்
கண்டதோர் பொழுதினில் தெரியும் கைதவம்
உண்டெனின் அஃதவர்க் கொளிக்க வொண்ணுமோ
விண்டவர் நம்புகல் மருவி வீழ்வரோ” (கம்ப.விபீடணன்.90)

பரிமேலழகர் உரை
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். (இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.).

மணக்குடவர் உரை
ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின். இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.

மு.வரதராசனார் உரை
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

No comments:

Post a Comment