இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்


குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
 
பொருள்
இன்னாமை - இனியவாகாமை; துன்பம், துயரம் தீமை

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

எனக் - என, என்று

கொளின் - கொண்டால்

ஆகும் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

ஒன்னார் - பகைவர்

விழையும் -  விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

முழுப்பொருள்
துன்பத்தை இன்பம் என்று கொள்ளும் மனப்பக்குவம் ஒருவருக்கு அமையும் என்றால் அவரை அவருடைய பகைவர் கூட மதிக்ககூடிய மதிப்புமிக்கவராக பெருமையுடையவராக கருதுவார்.

துன்பமும் துயரமும் வந்தால் ஓடிவிடாமல் சோர்ந்துவிடாமல் தனக்கு வந்த துன்பத்தை ஒரு சோதனையாக கருதி அச்சோதனையை இன்பமென கருதி அத்துன்பத்துடன் போறாடும் குணம் உடையவர் உண்மையில் வலிமையானவர். வலிமையான எவரையும் பகைவர்க்கூட போற்றுவர். 

அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.

தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெரு நாய்களைப் போல் நாமாகிவிடகூடாது. இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்க கூடாது. 

பிறர் துன்பத்தில் இன்பம் காணுபவர்கள் நிறைந்த உலகம் இது. இதில் தம்முடைய துன்பத்தை இன்பமாகக் கருதுபவரைப்பற்றிய குறளிது.

பொறையுடைமை அதிகாரத்தில் ஏற்கனவே படித்துள்ள ஒரு குறளை நினைவு கூர்தல் நல்லது. அக்குறள்: “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரை பொன்போற் பொதிந்து”. யார் எத்தகு துன்பம் வந்தாலும் பொறுத்திருப்பர்? பொறையுடைமை, அதாவது பொறுமை உள்ளவர்களை, பகைவர்க்கும் அருளும் நன்னெஞ்சினரை எல்லோரும் போற்றுவர்; தண்டிப்பவரை அவ்வாறு செய்யார் என்பதே அக்குறள் சொல்வது

“கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயம்” என்னும் அப்பர் பாடல் கூட அவருக்கு நமச்சிவாயத்தில் இருக்கும் நம்பிக்கையைக் காட்டினாலும், அவர் அதை துன்பமாக உணர்ந்ததைத்தான் காட்டுகிறது. “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் முன்பு சொன்னதும் இதைக் குறித்துதான்.

இன்பம் என்பதெல்லாம் துன்பம் என்ற தத்துவத்தின் மறுபக்கம்தான் துன்பமும் இன்பமே என்ற மனப்பாங்கும், இதுவும் கடந்து போம் என்னும் விலகி நின்று வாழ்க்கை நிகழ்வுகள் இரசித்து இன்புறுவதும். சொல்வது எளிது, கைக்கொள்ளுதல் கடினம். இக்குறளே கூட, துன்பம் என்று உணர்ந்ததை முதலில் சொல்லுகிறது, பின்னர் அதை இன்பமாகக் கொள்வதைக் கூறுகிறது. துன்பம் என்று உணர்ந்த நொடியே இன்பம் இல்லாமல் போகிறதே!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம். (துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின் அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம். மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.

மு.வரதராசனார் உரை
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

No comments:

Post a Comment