நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

குறள் 419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது
[பொருட்பால், அரசியல், கேள்வி]

பொருள்
நுணங்கிய - நுணங்குதல் - அசைதல்; மெல்லிதாதல்; நுட்பமாதல்; வளைதல்; துவளுதல்; செறிதல்; வாடுதல்.

கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ்.

கேள்வியர் - கேள்வி அறிவை உடையவர் 

அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

வணங்கிய - வணங்குதல் - நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்.

வாயினர் - பேச்சினை உடையவர்கள்

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

அரிது - அருமை; பசுமை; aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.  

முழுப்பொருள்
“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவர்க்கு அணியல்ல மற்றுப் பிற” என்று அறத்துப்பாலில், இனியவை கூறல் அதிகாரத்தில் ஏற்கனவே படித்திருக்கிறோம். அந்த பணிவுடையராருக்கு இன்சொல் சொல்லக்கூடிய வணங்கும் தன்மையுள்ள பேச்சு இருக்கும். 

அதுப்போல, நுட்பான அறிவை கற்றறிந்தவர்களிடம் இருந்து வாய்மொழியாக/கேள்வியாக கற்கும் பணிவு உள்ளோரிடமும் பணிவான சொற்களை கூறுவோரிடமும் இருக்கும். கேள்வி அறிவை பெறக்கூடிய மனப்பக்குவம் இல்லாதவரிடம் பணிவு இல்லை என்றே அர்த்தம். பணிவு இல்லாதவரிடம் பணிவில்லாத சொற்கள் வராது. எவ்வளவு கற்றிருந்தாலும் நாம் கற்றது கைமணளவு என்று உணர்ந்தோர் பணிவாக இருப்பர். அவர்கள் கற்றறிந்தோரிடமும் பிறரிடமும் கற்க பல இருக்கும் என்று நம்புவர். அதனால் பிறருக்கு செவிக்கொடுத்து கேட்பர். அப்பணிவும் அடக்கமும் இல்லாதோர் பிறரிக்கு செவியும் கொடுக்கமாட்டர் பணிவாகவும் பேசமாட்டர். 

சம்பந்தர் தேவாரம், “பணிவாயுள்ள நன்கெழு நாவிற் பக்தர்கள்” என்பார் சம்பந்தப்பெருமானும். கம்பநாடனும் விபீடணரைப்பற்றிக்கூறும் போது, “நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான்” என்பார். நுணங்கிய கேள்வி என்பதை பல இடங்களில் சொல்லியுள்ளார் கம்பர்.

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”நெடுநுண் கேள்வி” (பதிற் 7. ஆம் பத்து பதிகம்)

“நுணுங்கிய நூலவர் உணர்வே போல்” (கம்பர்.நகர 114)

”நுணுங்கிய கேள்வியாய்” (கம்பர்.தாடகை 24)

”நுட்புலன் நுணங்கு கேள்வி நுழைவின ரெனினும் நோக்கும்
கட்புலன் வரம்பிற்றாமே காட்சியும் கரையிற்றாமே” (கம்பர்.கடல்தாவு 94)

”நூற்பெருங்கடல் நுணங்கிய கேள்வியன்” (கம்பர்.ஊர்தேடு 206)

”வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியன் நுவல்வ தாயினான்” (கம்பர்.விபீடணன் 87)

”பணிவா யுள்ள நன்கெழு நாவிற் பக்தர்கள்” (சம்பந்தர்.பேணு பெருந்துறை 5)

பரிமேலழகர் உரை
நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.
(கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.).

மணக்குடவர் உரை
நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.

மு.வரதராசனார் உரை
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

சாலமன் பாப்பையா உரை
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

No comments:

Post a Comment