குறள் 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]
பொருள்
பற்றி - பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.
விடாஅ - விடா - விடாமல் - நீங்காமல்
இடும்பைகள் - இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்
பற்றினைப் - பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.
பற்றி - பற்றுதல் - பிடித்தல்; பயனறுதல்; ஊன்றிப்பிடித்தல்; ஏற்றுக்கொள்ளுதல்; மனத்துக்கொள்ளுதல்; தொடுதல்; உணர்தல்; தொடர்தல்; நிறம்பிடித்தல்; தீமுதலியனமூளுதல்; தகுதியாதல்; ஒட்டுதல்; பொருந்துதல்; போதியதாதல்; உறைத்தல்; உண்டாதல்; பொறுத்தல்.
விடாஅதவர்க்கு - விடாதவருக்கு; நீங்காதவருக்கு
முழுப்பொருள்
செல்வத்தின் மீது, உறவுகள் மீது, கொள்கைகள் மீது, வீடு வசதி வாய்ப்புகள் மீது, நிலத்தின் மீது, பொன் நகைகள் மீது, ஆடம்பரத்தின் மீது, கேளிக்கைகள் மீது, (இன்னும் பல ஆசைகள்) கொள்ளும் பற்றுகளை, ஆசைகளை விட்டு ஒருவர் குறிப்பாக துறவறத்தில் இருக்கும் ஒருவர் நீங்கவில்லையென்றால் அவரை துன்பம் நீங்காது பற்றிக்கொள்ளும்.
துன்பத்தின் ஊற்றுக்கண் ஆசைகளே என்று பொதுவாக கூறலாம். துறவறத்தில் பொருளியலுக்கு இடமில்லை லௌகீகத்துக்கும் இடமில்லை. ஆனால் துறவறத்தில் இருந்துக்கொண்டு ஆசைகளை பற்றிக்கொண்டால் உடல் இங்கேயேயும் உயிர் வேறெங்கேயும் இருப்பது போல் ஆகும். அதனால் ஒருவருக்கு வேதனையே. மேலும் ஆசையோடு இருத்தல் துறவறத்தில் முன்னேற, வீடுபேறு பெற மிகப்பெரிய தடையாக இருக்கும். முன்னே செல்லாமல் தேங்கி நிற்பதும் துன்பத்தை தரும்.
“பற்றி விடா “ என்பது பற்றிக்கொண்டு விடாமலிருப்பதையும், “பற்றிவிடா” என்பது, “பற்றுவதில்லை” என்பதையும் குறிப்பதைக் கருத்தில் கொண்டு இக்குறளைப் படிக்கவும்.
சம்பந்தரின் ஆருர் தேவாரம் பற்றுகளை
”பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம்நீங் காதென” (சம்பந்தர்.ஆரூர்.5)
“தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர தாரமென்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில்லெனப் பற்றினாயே” (சம்பந்தர்.ஆரூர்.9)
என்று குடும்பத்து உறவுகளையே பற்று என்கிறது. உலக வாழ்வியலில் உறவுகள் மற்று வாழ்க்கை வசதிகள் இவற்றைத் துறப்பதே உண்மையான பற்றறுத்த துறவு நிலையாம்.
மேலும்: அஷோக் உரை
இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.
“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.
பரிமேலழகர் உரை
பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.
மு.வரதராசனார் உரை
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
சாலமன் பாப்பையா உரை
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
No comments:
Post a Comment