தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

குறள் 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
தெருளான் - அறிவிலி

தெருளாதான் - அறிவில் தெளிவு இல்லாதாவர்

மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

கண்டற்றால் - கண்டு அடைதல் என்பது

தேரின் - தேர்தல் - tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, question; ஐயுறுதல் (குறள், 144,உரை.)--intr. To be well versed, proficient in;பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி  

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

அருளாதான் - பிற உயிர்களிடத்தில் அருள் இல்லாதான்

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அறம் - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்

முழுப்பொருள்
பிறரிடத்தில் மனதளவில் அருளில்லாதவன் செய்யும் அறம் பயனளிக்காது ஏனெனில் அருளின்மையே அவன் செய்யும் அறத்தை அழித்துவிடும். எப்படியென்றால், அறிவில்லாதவன் மெய்ப்பொருள் கண்டது போல் பயனற்றதாகும். 

உதாரணமாக சொன்னால் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சிதம்பர ரகசியம் என்னும் ஒரு சந்நிதி மூலவர் நடராஜர் அருகில் இருக்கும். அங்கே பொன்னாலான வில்வ தள திரை விலகிய உடன் ஆகாச ஸ்வரூபமாக இறைவன் உள்ளார் என்றே பலர் நினைக்கின்றனர். அது மெய்யான ஞானம் இல்லாதவர்கள் கூறுவது. ஞானம் உள்ளவர்கள் அறிவர் மாயை என்னும் திரை விலகினால் தான் ஒளி தெரியும் என்றென்பது. அதுவே அறிவில்லாதவர்கள் திரையை விலக்கினாலும் மெய்யான ஒளியை காண முடியாது. ஆதலால் திரை விலக்கியதன் பயனை பெற முடியாது. அதுபோலவே அருள் இல்லாதவர்கள் அறம் செய்தாலும் பயனில்லை. 

சிதம்பர ரகசியம்
ஐந்தாயிரமாண்டுகளுக்கும் மேலாக உலக முழுவதும் அறியப்பட்ட வார்த்தை, 'சிதம்பர ரகசியம்' ஆகும். ஆனால் , அதன் ரகசியம் அறிந்தவர் ஒரு சிலரே.

சிதம்பர ரகசியத்தை புறக்கண்னால் காணாமல்  ஞானக்கண்ணால் கண்டுணர்வதே இந்த ரகசியம் உணர்வதன் அருளாகும். இதற்கு இறையருள் தேவை. பரம ரகசியமாகவும், பராபர ரகசியமாகவும் விளங்கும் சிதம்பர ரகசியம் சிவ ரகசியமாகும்.

உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம்.. சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும்.

சிவ ரகசியத்தை- சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பொருள் வல்லது சாதனையேயன்றி வேறொன்றும் இல்லை.

சிதம்பர ரகசிய பீடம்
தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.

இது 'திரஸ்க்ரிணீ' என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில்  உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட  'வில்வ தளமாலை' ஒன்று தொங்கும்  காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது.  

மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். அந்த ரகசியத்தின் அடிப்படையில் தான்  

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. 'மனிதனே !உன்னிடம் ஏதும்  இல்லை’ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.

புராணங்கள்  சிதம்பர ரகசியத்தை 'தஹ்ரம்' என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி  அருவமாய் இருப்பதால் ‘அரூபம்’ என்றும் சொல்வார்கள்.

இந்த சிதம்பர ரகசியத்தை  வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன்  கிடைக்கும். ஆனால் எவ்வித  பலனையும் சிந்திக்காமல் ‘நிஷ்சங்கல்’பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.

இந்த சிதம்பர ரகசியம் என்பதன் விளக்கம். இது  மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை  என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்‘ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு  மூலஸ்தானம்.

அருவ  வடிவமாக,  இறைவன்  இங்கு ஆகாய உருவில்  இருக்கிறான்  என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும்.  அதனால் சிதம்பரம் ஆகாயத் தலம் என்றும் பூசிக்கப்படுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.).
 
மணக்குடவர் உரை
தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும். இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது

மு.வரதராசனார் உரை
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

No comments:

Post a Comment