ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

குறள் 220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து 
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
ஒப்புரவினால் - ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.

வரும் - வரும் ; வந்து சேரும் 

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

எனின் -  என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்

விற்றுக் - விற்றல் - பண்டங்களைவிலைக்குக்கொடுத்தல்.

கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

தக்கது - தகுதி; தகுதியானது.

உடைத்து  -  உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
ஒப்புரவாளனுக்கு பிறருக்கு உதவி செய்து ஒரு கேடு (அல்லது வறுமை) வரும் என்ற நிலை வந்தால் (அல்லது யாராவது சொன்னால்) அக்கேட்டை பெறவதற்காகவாது அவன் தன்னை விற்றாவது அவ்வுதவியை செய்யவேண்டும். உட்பொருள் என்னவெனில் பிறருக்கு உதவி செய்து கெட்டவன் யாரும் இல்லை யாரும் இருக்கவும் முடியாது. ஆதலால் கண்ணை மூடிக்கொண்டு தன்னை விற்றாவது உதவு என்று கூறுகிறார் திருவள்ளுவர். பிறருக்கு உதவ வேண்டுமெனில் தன்னை விற்றலும் தகும்.

அதுமட்டும் இன்றி, பிறருக்கு உதவுவது எவ்விதத்திலும் கேடு அல்ல. இம்மையில் பிற்காலத்திற்கும், அடுத்துவரும் மறுமைக்கும் முதலீடு. ஒப்புரவு செய்தால் பெருமையும் புகழும் கிட்டும். 

பழமொழிப் பாடல் (218) ஒன்று  இதே கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது:
“அடுத்தொன் றிரந்தார்கொன் றீந்தாரைக் கொண்டார் படுதேழை யாமென்று போகினும் போக”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து. கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

No comments:

Post a Comment