உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

குறள் 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
உடைமையுள் உடைமை - uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).
உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் (நகை) உரிமை உரியவை

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

விருந்து - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல், 
ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

ஓம்பா - பேணாத 

மடமை - பேதைமை

மடவார் - பெண்டிர்; மூடர்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
ஒருவனிடம் செல்வம் இருப்பினும் பிறருக்கு விருந்து அளித்து பேணாமால் இருக்கிறார் என்றால் அவர் செல்வம் இருந்தும் வறுமையில் இருக்கிறார் என்று தான் அர்த்தம். அத்தகைய மூடர்கள் பலர் உண்டு இவ்வுலகில்.

ஏன்  செல்வத்தில் வறுமை என்று இதனை கூறுகிறார் திருவள்ளுவர்? ஒருவரிடம் செல்வம் இல்லை என்றால் அவரால் விருந்து அளித்து பேண முடியாது. அதன் பெயர் வறுமை. அதனை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் செல்வம் இருந்தும் விருந்தளிக்க மனம் வரவில்லை என்றால் பின்பு கையில் இருப்பது செல்வம் அல்ல அதற்கு பெயர் வறுமை. செல்வம் பொருட்களில் இல்லை. மனதில் இருக்கிறது. பிறருக்கு மனமுவந்து விருந்தளிக்கக்கூடிய மனமே செல்வம்.

“செல்வர்க்கழகு செழுங்கிளைத் தாங்குதல்” என்று வெற்றிவேற்கையில், அதிவீரராம பாண்டியர் கூறுவார்.   “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்ற பட்டினத்தார் வாசகமும் “உங்கள் அத்தமெல்லாம் ஆழப் புதைத்து வைத்தாலும் வருமோ நும் மடிப்பிறகே” என்று எங்கோ படித்த கவி வாக்கும் நினைவுக்கு வருகின்றன.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“இன்மையுள் இன்மை விருந்தொரால்” (குறள் 153)

பரிமேலழகர் உரை
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.

மு.வரதராசனார் உரை
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
விருந்தாட விரும்பாத செல்வந்தன், தரித்திரனே.

No comments:

Post a Comment