புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
புறம்பு - puṟampu   n. புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்
 
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

எல்லாம் - முழுதும்

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

யாக்கை - கட்டுகை; உடம்பு.

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

இலவர்க்கு - இல்லாதவர்க்கு 

முழுப்பொருள்
அகத்தின் உறுப்பு என்றால் அது அன்பு தான் என்றென்கிறார் திருவள்ளுவர். ஒருவர் அகத்தில் அன்புடன் இருந்தால் தான் அவர் உயிருடன் வாழ்கிறார். அப்படி அன்பு இல்லை என்றால் மற்ற உறுப்புகள் புறத்தில் இருந்தும் என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அன்பு இல்லையென்றால் இல்லறம் சிறக்காது. 

1) புற உறுப்புகள் என்று  ஐம்புலன்களானமே  மெய் (உடல்) கண் செவி வாய் மூக்கு ஆகியவற்றால் நுகரும் இன்பம் இன்பம் அல்ல. உண்மையான அன்பு இருந்தால் அகத்தால் உணரும் இன்பமே இன்பம்.

2)புறம் என்றால் நம்மை சுற்றியுள்ள ஆடம்பரங்கள் - பெரிய வீடு, வேலையாட்கள், தங்க நகைகள், பகட்டான உடைகள், ஊர் சுற்ற ஊர்திகள் (கார்), வெளிநாட்டு பயணங்கள், வங்கிகளில் அதிக பணம், பல சொத்துக்கள்.  இவற்றை நுகர்வது ஐம்புலன்கள் தான்.  

உண்மையான அன்பு இல்லை என்றால்  புறவயமான ஆடம்பரங்கள் இருந்தும் பயனில்லை. உதாரணமாக வீட்டிலே எல்லா ஆடம்பரமும் இருந்தும் மனதில் உண்மையான அன்பு இல்லை என்றால் நம்மிடம் நமது கணவனோ மனைவியோ கூட இருக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாக புறவயமான ஆடம்பரங்கள் இருந்தாலும் உண்மையாக மனதார பேச ஒருவர்க்கூட நம்மிடம் இல்லை என்றால் அதற்கு காரணம் நம் மனதில் அன்பு இல்லை என்பது தான் என்றால் பின்பு இந்த ஆடம்பரங்களால் என்ன பயன் ?

(நாம் அன்புடன் இருந்தும் மற்றவர்கள் நம்முடன் இல்லாமல் இருக்க வேறு சில காரணங்கள் இருக்கலாம். அது அவர்களின் குறையாக இருக்கலாம். அவற்றை நமது குறையாக இங்கு சொல்லவில்லை)
 
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
‘யாக்கைக்
கென்பிற்சிறந் தாயதோர் ஊற்றமுண் டென்னலாமே
அன்பிற்சிறந் தாயதோர் பூசனை யார்கணுண்டே” (கம்ப.கடல் தாவு 61)

பரிமேலழகர் உரை
யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

மணக்குடவர் உரை
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

மு.வரதராசனார் உரை
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..

சாலமன் பாப்பையா உரை
குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அன்பில்லாதவர் அழகாயிருந்தாலும் எடுபட மாட்டார்.

No comments:

Post a Comment