அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

இல்லா - இல்லாத 

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வாழ்க்கை  - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

வன்பாற்கண் - வன்பார் - இறுகியபாறைநிலம்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வற்றல் - வடிகை; வறளுகை; உலர்ந்தது; உலரவைத்தகாய், இறைச்சிமுதலியஉணவு.

மரம்  - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை

தளர்ந்து - தளிர்தல் - துளிர்த்தல்; தழைத்தல்; செழித்தல்; மகிழ்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
அகத்தில் அன்பு இல்லை என்றால் அத்தகைய உயிர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா ? பாலைநிலத்தில் வற்றிய மரம் மீண்டும் தளிர்விடும் என்பதுபோல் இருக்கும். 

நாம் கவனிக்க வேண்டியவை 
1. அகத்தில் (மனதில்) அன்பு இருக்க வேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர். வெளிவேஷத்திற்கு அல்ல. 

2. உயிர் வாழ்க்கை என்றென்கிறார். அதாவது எல்லா உயிர்களுக்கும் இது பொருந்தும். மனிதனுக்கும் மட்டும் அல்ல. 

3. வற்றல் மரம் - அதாவது எல்லா மரங்களும் ஈரத்தன்மையுடன் தான் இருக்கும். அன்பு இருக்கும். ஆனால் மரத்தில் ஈரத்தன்மை குறைந்தால் மரம் பட்டுப்போய்விடும். அதாவது அன்பு குறைய குறைய வாழ்வின் பசுமை/மகிழ்ச்சி குறையும். சரியான தட்பவெட்பநிலைகள் இருந்தும் இலைகள்  துளிர்க்காத மரங்கள் உயிர் அற்ற மரம். 

பட்டுப்போன மரம் நிழல் கூட தராது. ஆதலால் அதன் கீழே நிழலுக்கு கூட ஒதுங்க முடியாது. அம்மரம் இந்த பூமிக்கு பாரம். அதுப்போல மனதில் அன்பு இல்லாதவர்கள் உயிர் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களிடம் அன்பு துளிர்க்கும் என்று எதிர்பார்க்க கூடாது. 

பூதத்தாழ்வார், “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்” என்றார். அன்பெனும் விளக்கிலே, ஆர்வமென்னும் நெய்யை ஊற்றி, இன்பத்தோடு, நெகிழ்ந்த சிந்தையோடு,  ஞானச் சுடர்விளக்கேற்றினாலே நலமுள்ள வாழ்வு; அது நாராயணனுக்கு மட்டுமல்ல, நானிலத்தோர் எல்லோருக்கும்தான்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.).

மணக்குடவர் உரை
தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.

மு.வரதராசனார் உரை
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அன்பற்ற வாழ்க்கை அர்த்தமற்றது.

No comments:

Post a Comment