ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

குறள் 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஈன்ற  - ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்

பொழுதின் - பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்

பெரிது  - பெரியது; மிகவும்

உவக்கும் - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

மகனைச் - மகனை - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன்.

சான்றோன் - சூரியன்; அறிவொழுக்கங்களாற்சிறந்தவன்; மிருகசீரிடநாள்.

எனக் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

கேட்ட - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்

தாய் - அன்னை, ஐவகைத்தாயருள்ஒருத்தி; தாயாகக்கருதப்படும்அரசன்தேவி, குருவின்தேவி, அண்ணன்தேவி, மகள்கொடுத்தவள்இவர்களுள்ஒருத்தி.

முழுப்பொருள் 
முன்குறிப்பு: இது மகன் மகள் இருவருக்கும் பொருந்தும். என் நோக்கில் மகன் என்று பொதுவாக கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண் தன்னுடைய வயிற்றில் இருந்து பிள்ளை பெற்றெடுக்கும் பொழுது உள்ளூர பெறும் மகிழ்ச்சி இருக்கிறதே அதற்கு நிகரே இல்லை. ஆனால் அந்த நிகரற்ற மகிழ்ச்சிக்கும் மேலானதாக ஒரு இன்பம் அந்த தாய்க்கு இருக்கிறது. அது தன்னுடைய மகனை இவ்வூரார் சான்றோன் என சொல்லுவதை கேட்பதாகும். 

கல்வியாளன், அறிவாளன், புலமையாளன், கவிஞன் என்று பல தளங்கள் உள்ளன. கவிஞன் என்றால் அறிவாளிகளிலுள் எல்லாம் சிறந்தவன். அதனால் கம்பராயமானத்தில் விபீடனை "கவிஞரின் அறிவின் மிக்காய்!" என்று கூறுகிறார் கம்பர். ஏனெனில் கவிஞன் பார்க்கிற பார்வையே வேறு. மற்றவர்கள் காணாததை அவன் கண்டுவிடுவான். 

கவிஞன் என்ற சொல்லுக்கு மேலே ஒரு சொல் இருக்கிறாதா? அது தான் சான்றோன். அத்தகைய சொல்லை ஒரு தாய் தன் மகனை பற்றி கேட்டாள் அது அவளுக்கு மிகப்பெரிய உவகை அளிக்கும். 

ஒரு தந்தைக்கு தன் மகன் தோளுக்கு வளர்ந்துவிட்டால் தோழன் ஆகிவிடுகிறான். மகன் சம்பாதிக்க தொடங்கிய உடன் மகன் தந்தை உறவு கொஞ்சம் மாறுபடுகிறது ஏனெனில் மகன் தன் சொந்தக்காலில் சம்பாதித்து நிற்கிறான். ஆனால் ஒரு தாய்க்கு தன் பிள்ளை எப்பொழுதுமே பிள்ளை தான். அவனை வா போ வாடா போடா இந்த சாப்பிடு சாப்டியா என்று அதட்டுவாள். என்றுமே அவளுக்கு தன் மகன் ஒரு குழந்தை தான். அது ஒருவித அறியாமை (உணரிவின் அறியாமை. இது பெண்ணை இழிவுபடுத்த கூறப்படுவில்லை). அதனால் கற்றோர்கள் தன் மகனை சான்றோன் என சொல்லிக்கேட்டால் அவள் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறாள். 

உடல் ரீதியாக பார்த்தால், ஒரு பிரசவத்திற்கு பிறகு உடம்பில் இயற்கையாகவே ஹார்மோன்கள் (சுரப்பிநீர்) சுரக்கும். சுரப்பினீர்களினாலும் அகத்தினாலும் ஒரு தாய் மகிழ்ச்சி அடைகிறாள். இங்கே சுரப்பிநீரின் பங்கு இருக்கிறது. தவறில்லை. ஆனால் சான்றோன் என கேட்கும் பொழுது அகத்தில் இருந்து மட்டும் முழுவதுமாக மகிழ்ச்சி வருகிறது. அது இன்னும் சந்தோஷம். 

யோசித்துப்பாரத்தால் ஒரு பெண் பத்து குழந்தைகளைப் பெற்று எடுத்தால் முதல் குழந்தை பெற்று எடுத்த அதே உவகையை பத்தாவது குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது பெறுவாளா என்பது சந்தேகமே. ஒரு வித சலிப்புக்கூட ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் ஒரே மகனை பத்துப் பேர் சான்றோன் என்று சொல்லு கேட்டாலும் அவளுக்கு சலிப்பு அடைய மாட்டாள். அதேப்போல் பத்து குழந்தைகளையும் சான்றோன் என்று சொல்லிக்கேட்டாலும் சலிப்பு அடைய மாட்டாள். 

தமிழ் இலக்கியங்களிலே வீரத்துக்கு முதலிடம் கொடுத்து, மாண்டுபோன தன்மகன் புறமுதுகு காட்டி, முதுகிலே வெட்டுபட்டு மாண்டான் என்றறிந்தால், ஒரு தாய் அம்மகனுக்கு பால்கொடுத்த தன்னுடைய மார்பகங்களை அறுத்து எறிந்து மாண்டு போவாள் என்ற காட்சிகள் வருகின்றன. அம்மகன் நெஞ்சிலே வாள்வாங்கி இறந்திருந்தால், “படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே” என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று.
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனாயிருந்தாலும், உவகையெல்லாம் தாய்க்கென்றது, தாய்-மகன் என்கிற உறவின் தனிப்பிணைப்பை காட்டுதற்கே.  


சரி அது என்ன சான்றோன் ஆக்குதல்? கற்றவன், அறிஞன், பணக்காரன், அரசன், மந்திரி என்றெல்லாம் கூறாமல் அது என்ன சான்றோன்? சான்றாண்மை அதிகாரத்தைப் படித்தால் அதற்கான விடை முழுவதமாய் கிடைக்கும். உதாரணமாக சொன்னால் “குறள் 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்” . அவ்வதிகாரத்தில் சான்றோன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய குணநலங்கள் கூறப்பட்டு இருக்கும். சரி, அது ஏன் சான்றோன்? ஏனெனில் சால்புடைய இயல்புகளே ஒரு கட்டிடத்தை பல நூற்றாண்டுகள் தாங்கி நிற்கும் தூணாய் அமையும். நான் “Build to Last: Successful Habits of Visionary Companies by Jim Collins" என்ற ஒரு புத்தகத்தை சில ஆண்டுகள் முன்பு படித்தேன். அதில் ஒரு நிர்வாகம் பல ஆண்டுகளாக (ஒரு 80+ ஆண்டுகள்) பல தலைமுறைகளாக நீடித்து நிற்பதற்கு காரணம் என்ற ஆராய்ச்சியைப் பற்றி கூறப்பட்டு இருக்கும். அது செயல்வியூகம், லாபம், பணம், யோசனைகள் (ideas), எல்லோரையும் கவரக்கூடிய தலைவர் என்றவற்றையெல்லாம் அல்ல ஏனெனில் பல வெற்றியடைந்த நிர்வாகங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளன. ஒரு நிர்வாகத்தை பலகாலம் நிலைத்து நிற்க அடிப்படையான தேவை காலாவதி ஆகாத நிர்வாக கொள்கைகள் (Core Values / Ideologies). அதுவே அந்நிறுவனத்தை வழி நடத்தும் வளர்ச்சிப்பெறச் செயும். அதுப்போல் ஒருவருக்கு வாழ்வில் குணநலங்கள் முக்கியம். அதுவே அவனையும் அவன் சந்ததினயரையும் சான்றோன் ஆக்கும். உதாரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் ஒரு தலைமுறையில் ஒருவர் சான்றோன் ஆக அல்லது பெரும் பணக்காரணாக இருப்பதை காணலாம். ஆனால் அடுத்த தலைமுறையிலோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையிலோ ஒரு பெரும் வீழ்ச்சியை காண முடியும். ஏனெனில் அவர்கள் தங்களை சான்றோன் ஆக்கிய அல்லது வெற்றிபெற்றவர்களாக்கிய நற்குணங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி (கற்றுக்கொடுத்து) இருக்க மாட்டார்கள். அதுவே சீராக அதை செய்து இருந்தால் அக்குடும்பம் பல தலைமுறைகளாக முன்னேறிக்கொண்டு இருப்பதை காண முடியும். அதனால் தான், ”குறள் 68  தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்றுக் கூறினார் திருவள்ளுவர்.

அதுமட்டும் இன்றி ஒரு தாய் பிறரிடம் இருந்து உன் பிள்ளை பெரிய அறிவாளியாமே, பெரிய பணக்காரனாமே, நல்லா வசதியா இருக்கானாமே என்று கேள்விபட்டால் அவள் பெரும்பாலும் முதலில் நினைப்பதோ அல்லது சந்தேகப்படுவதோ ”ஐயோ என் பிள்ளை மேல் இவர்கள் பொறாமை கொண்டு இருக்கிறார்கள்; இவனுக்கு திருஷ்டி சுத்திப் போடவேண்டும்”. என்பதுவாகதான் இருக்கும். அதுவே ஒருவனை பிறர் சான்றோன் என்று கூறினால் மகிழ்ச்சி அடைவாள் அவள் தாய் ஏனெனில் மற்றவையெல்லாம் ஒருவித உழைப்பால் வருவது, நிலையில்லாதது, சென்றுவிடக்கூடியது. சான்றோன் எனப்படுவது ஒழுக்கத்தால் வருவது.

பி.கு: தந்தைக்கு மகன் உதவி (பிரதி உபகாரம்) செய்துவிடலாம். ஆனால் தாய்க்கு மகனால் பிரதி உபாகரம் செய்யவே முடியாது. ஏனெனில் அது எந்த வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காத தாய் அன்பு. குறைந்தபட்சம் சான்றோன் என பிறர் சொல்ல தாய் கேட்கும் அளவிற்கு நடந்துக்கொள்ள வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டன னென்று முவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே” (புறநா 277:2-4)

“படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே” (புறநா 278:8-9)

“வையகமாம் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபுகேட்டேற்
கையனையான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுதொத்
திருந்த தில்லை” (கலிங்க 197)


பரிமேலழகர் உரை
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். (கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்; தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.

மு.வரதராசனார் உரை
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை
தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

English Meaning - As I taught a kid - Rajesh
A mother feels very happy after she gives birth to her child. At the same time, a mother will feel much more happier when she hears from someone else that her son / daughter is a good person.

Questions that I ask to the kid
When does a mother become really happy?

No comments:

Post a Comment