அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

குறள் 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

எனப்பட்டதே - என்றென படுவதே 

இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

அஃதும் - அதுவும் 

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

பழிப்பது  - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

ஆயின் - ஆனால்; ஆராயின், ஆதல், ஆகுதல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு

முழுப்பொருள்
அறத்தொடு இயைந்த இல்வாழ்க்கை சிறந்ததாகும். இல்லறத்தில் இருப்போர்  பொறுமையுடன் கடினமாக உழைத்து இல்லறத்தின் அறங்களை நிறைவுசெய்கின்றனர். அவர்கள் துறவறத்தில் பெரும் பயனை பெறுவர் என்று முன்னரும் பார்த்தோம். அப்படி இல்லறத்தில் இருந்தும் பிறரின் பழிகளை பெறாமல் வாழ்ந்தால் அதைவிட சிறந்தது ஏதுமில்லை. 

துறவறத்தில் இருப்போர் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வர். ஆனால் இல்லறத்தில் இருப்போர் ஐம்புலன்களையும் அடக்கி ஆளமாட்டார்கள். இருப்பினும் தன் இல்லற அறங்களை செய்து பிறரின் பழி வராது வாழ்வானாயின் அவன் துறவறத்தில் பெறக்கூடிய இடத்தினை இல்லறத்தின் மூலமாகவே பெறுவான். 

ஒப்புமை
”மனைவாழ்க்கை முன்னினிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தானினிது நன்கு” (இனியவை 3)

”இல்லற மல்லது நல்லற மன்று” (கொன்றைவேந்தன்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
ஊர் பழிக்காமல் வாழ்வதே உயர்வு.

No comments:

Post a Comment