குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

குறள் 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.

ஏறி - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்

கணம் - காலநுட்பம்; கூட்டம்; விண்மீன்கூட்டம்; ஒருநோய்; பேய்; சிறுமை; திரட்சி; ஒருவகைப்புல்.

ஏயும் - ஏய்தல் - ஒத்தல், பொருந்தல், தகுதல்; எதிர்ப்படுதல், சந்தித்தல்

காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
நற்குணங்கள் ஒழுக்கம் ஆகிய சிறிய குன்றின் மேல் ஏறி மேன்மை அடைந்து நிற்கும் சான்றோர்களுக்கு ஒரு கணமேனும் (ஒரு  நொடியேனும்) கோபம் தோன்றாது. அப்படி ஒரு நொடி தோன்றினாலும் அது மிக அரிது. அப்படியே கோபம் வந்தாலும் அது நொடிப்பொழுதில் மறைந்துவிடும். அப்படி அரிதாக தோன்றினாலும் அதனை எதிர் நிற்பவர் ஒரு கணம் கூட தாங்க முடியாத வெம்மையை கொண்டதாக இருக்கும் அழித்துவிடும் (ஏனெனில் சான்றோர் சொற்கள் பலித்துவிடும் என்று முந்தைய குறளில் (நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்)  பார்த்தோம். 

கோபம் கண்ணை மறைத்து, கருத்தை அழிக்கும். 

வள்ளுவர், அப்படி குணக்குன்றாய் இருப்பவர்களும், கோபம் வரக்கூடிய தருணங்கள் உண்டு, ஆனால் அவ்வாறு வந்தபோது, அக்கோபம் நொடியளவுகூட நீடிக்காது என்கிறார். நாலடியாரில் இதே கருத்தையொட்டி, “நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம்” எனப்படுகிறது.

ஒளவையார் மூதுரையில் இப்படி கூறுகிறார்.
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம். (23)

கற்பிளவோ டொப்பர் கயவர்  - கீழ்மக்கள் கடுங்கோபம் கொண்டால் கல் பிளந்ததுபோல உறவைப் பிளந்து கொள்வர். அவ்வெடிப்பு பின்பு ஒன்று சேராது. 

கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே - நல்லோர் கடுஞ்சினத்தினால் பிரிந்தாலும் பின்பு பிளந்த பொன் ஒட்டிவிடுவது போலசேர்ந்துவிடுவார். 

விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம் - நல்லொழுக்கமுடைய அறிவுடையோர்/சான்றோர் கோபம், விற்பிடித்து எய்த அம்பினால் ஏற்படும் வடு உடனேயே மறைந்து விடுவதுபோல தோன்றிய உடனேயே மறைந்துவிடும். 

ஒப்புமை
”கோதி லாத குணப்பெரும் குன்றனார்” (பெரிய.திருக்கூட்டச் 7)

“குன்றுபோற் குணத்தான்” (கம்ப.வேள்வி.58)

“மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்” (யசோதர 23)

”நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே 
சீர்கொண்ட சான்றோர் சினம்” (நாலடி 68)

“கலைவலார் நெஞ்சில் காமமே போன்றும்
கடவுளர் வெகுளியே போன்றும்
உலைவிலார் நில்லா தொருபக லுள்ளே
உருப்பவிர் வெஞ்சுரங் கடந்தார்” (சீவக 2107)

“பொறுப்பர்என் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நன்னாட
பேர்க்குதல் யார்க்கும் அரிது” (நாலடி 161)

“அருமை யுடைய அரண்சேந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்” (நாலடி 164)

“இனியொரு கற்பமுண் டென்னின ன்றியே
வனைகழல் வயங்குவார் வீரர் வல்லரோ
பனிவரும் கானிடைப் பழிப்பில் நோன்புடை
முனிவரர் வெகுளியின் முடிபென்றார்சிலர்” (கம்ப.மாரீசன்.34)
 
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

No comments:

Post a Comment