துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

குறள் 926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்

துஞ்சினார் - உறங்கினாலும் 

செத்தல் - சாதல்; தேங்காய்நெற்று; உலர்ந்துசுருங்கியபனம்பழம், மிளகாய், வாழைமுதலியன; மெலிந்தது; அறக்காய்ந்தது, பசுமையற்றது.

செத்தாரின் - செத்தார் -  இறந்தவர் ; மெலிந்தவர் ; 

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்

அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

நஞ்சு - விஷம்; விடம்; தீயது; குழந்தைபிறந்தபின்வெளிப்படும்தசைமுதலியன.

உண்பார் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

கள் -  மருதநிலச்சார்பு, பொய்கை, மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.;

உண்பவர் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

முழுப்பொருள்
உறங்குபவர்க்கும் இறந்தவர்க்கும் பெரிய வேறுபாடில்லை. ஏனெனில் இறந்தவராலும் ஒரு பயனும் இல்லை உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுதும் எப்பயனும் இல்லை. உறங்குவது என்றால் கண் மூடி உறங்குவது மட்டும் அல்ல. உறங்குவது என்றால் சோம்பித் திரிதல் எத்தொழிலையும் செய்யாது இருத்தல் என்றும் பொருள் கொள்ளலாம். 

உறங்கும் நிலையென்பது இறந்த நிலைக்கு சமம். உணர்ச்சியற்ற நிலை. (யோகாசனத்தில் இறுதியில் ஷவாசனா செய்வார்கள் (இறந்த நிலை) என்பதை நினைவில் கொள்ளலாம்). உறக்க நிலையில் நமது உடலின் பல பாகங்கள் செயல் இழந்தே இருக்கும். விஞ்ஞானத்தில் REM sleep என்று கூறுவார்கள். இந்த நிலையில் தசைகள் எல்லாம் செயலற்று இருக்கும். அதனை paralysis என்று கூறுவார்கள். உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது ஒருவர் தெளிவாக இருக்க மாட்டார்கள். அவர்களை சட்டென எழுப்பி உடனே ஒரு முடிவை எடுக்க சொன்னால் அவர்கள் தவறான முடிவை எடுக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர்கள் தூக்கக்கலக்கத்தில் இருந்துத் தெளிய குறைந்தபட்சம் சிறிது காலம் தேவைப்படும். 

கள் என்பதும் ஒருவித நஞ்சு. நம் இரத்தத்தில் கள் கலந்து ரத்தத்தின் அமில தன்மையை மாற்றிவிடும். ஆதலால் கொஞ்சம் கொஞ்சமாக மூளையையும் மற்ற அங்கங்ககளையும் செயலிழக்க செய்து அழித்துவிடும். கள் உண்பவர்களாலும் நல்ல முடிவுகளை எடுக்க முடியாது. ஆதலால் எப்பொழுதும் கள் உண்பவர்கள் நஞ்சு உண்கிறார்கள் என்றே அர்த்தம். ஆதலால் நஞ்சு உண்பவர்களும் கள் உண்பவர்களும் வேறு அல்லர். 

நஞ்சுக்கு சமமான கள்ளை உண்ணாதே என்றென்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்
தஞ்சமென் றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்
கஞ்சமெல் லணங்கும் தீரும் கள்ளினால் அருந்தி னாரை
நஞ்சமும் கொள்வ தல்லால் நரகினை நல்கா தன்றே (கம்ப.கிட்கிந்தை 95)

பரிமேலழகர் உரை
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர். (உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.

மு.வரதராசனார் உரை
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
இன்று சனிக்கிழமை. சாலைகளில் மக்கள் வெள்ளம் வேட்டை மிருகத்தால் துரத்தப்படுவதுபோல் விரைகிறது. அதென்னவோ சனியிரவு என்பது எங்களூர் வாரச் சம்பளத்தவர்களுக்குச் சனிபிடித்த இரவுபோல் ஆகிவிடுகிறது. 

சாலையில் நிதானமாகச் சென்றுகொண்டிருப்பவர்கள் வலது பக்க மதுக்கடையைப் பார்த்ததும் சூன்யத்திற்குக் கட்டுப்பட்டவர்போல் சடாரென்று திரும்புகின்றனர். எதிரில் வருகிறவர் அல்லது அணைந்து உடன்வந்த வாகனத்தினர் தற்காத்துத் தணிவதால் மட்டுமே ஒரு விபத்து தவிர்க்கப்படுகிறது.

நீர்க்குழாய் பொருத்துநர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். மேல்மாடியில் நெகிழித் தொட்டி நிறுவி வீட்டுக்குத் தண்ணீர் இணைப்புகள் தரவேண்டும். குழாய் விற்பனைக் கடையில்தான் அவரைப் பரிந்துரைத்தார்கள். இப்போதெல்லாம் இதுபோன்ற சிறு வேலைகளுக்கு உரிய ஆள்கள் கிடைப்பதேயில்லை. வேண்டிய பொருள்களையெல்லாம் அந்தக் கடையிலேயே வாங்கி, தானி வண்டியொன்றில் வீடு வந்து சேர்ந்தோம். சாமானங்களை இறக்கி எங்கெங்கே எப்படியெப்படிப் பொருத்துவது என்று அன்னார் யோசித்துக்கொண்டிருக்க மதியமாகிவிட்டது.

‘சாப்பாட்டுக்குப் பணம் கொடுங்க. ஐந்நூறு வேண்டும்’ என்று கேட்க ஒன்றும் பேசாமல் கொடுத்தேன். போன ஆள் போனவர்தான். காணவில்லை. குழாய் விற்ற கடைக்கு வந்து அவரின் வீடு இருக்குமிடம் கண்டுபிடித்து அருகில் சென்றால் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ஆள் தலைகொள்ளாப் போதையில் இருந்தார். என்னை ‘யார் நீ ?’ என்று கேட்டார். 

பேசாமல் வந்துவிட்டேன். மறுநாள் பூனையைப்போல் வந்து சேர்ந்தார். பலரிடம் விசாரித்த வகையில் ‘இந்தப் பகுதியிலேயே பிளம்பிங் பணிக்கு இந்த ஆளை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. ஆனால் மொடாக் குடிகாரன்’ என்றார்கள். நான் என் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு ‘குடி தவிர்’ என்று போதித்தேன். கேட்டுக்கொண்டார். ஆனால், பணி முடிந்ததும் மீண்டும் கடைக்குத்தான் போகப்போகிறார். 

இவரைப்போன்று குடியால் நாசமாய்ப்போன தொழில் வித்தகர்கள் ஆயிரமாயிரம். ‘நீ என்னவாக ஆகியிருக்கத் தகுந்தவனோ, அவ்வாறு ஆகாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்கும். அதில் முதலிடம் குடிப்பழக்கத்திற்கு...’ என்பது என் துணிபு. 

முன்பு நல்ல குழாய்ப்பணிக் கலைஞன் எனக்கு ஆஸ்தான பணியாளனாக இருந்தான். வேலையில் சுத்தமிருக்கும். அவனிடம் பணியை ஒப்படைத்துவிட்டு நாம் நிம்மதியாக வேறு கவனத்திற்குள் திரும்பலாம். இடையில் அவனைக் காணவில்லை. அடுக்ககக் கட்டுமான நிறுவனமொன்றில் பணிக்குச் சேர்ந்துவிட்டான். அவன் தன் சம்பளமாகச் சொன்ன தொகை தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் பெறுவதற்கு நிகராக இருந்தது. வாழ்க’ என்று வாழ்த்தி அமைந்தேன். குறிப்பு : அவனுக்குக் குடிப்பழக்கம் இல்லை. 

வேறொரு சமயத்தில் குழாய்களில் படிந்த உப்பகற்ற வேண்டியிருந்தது. எங்கள் வீட்டுக் குழாய்களில் ஆறுமாதங்களுக்கொருமுறை உப்பு திரண்டுவிடும். தினத்தாளில் பெயரட்டை அளவு விளம்பரம் ஒன்றைக் கண்டேன். ‘பைப்புகளில் உப்பு அடைப்பா ? நாங்கள் நீக்கித் தருகிறோம்’ என்றிருக்கவே அழைத்தேன். 

எடுத்தவர் தாம் கேரளத்தில் இருப்பதாகச் சொன்னார். ஆனாலும் என் அன்பு அழைப்பைச் சிரமேற்கொண்டு தம்முடைய ஆள் ஒருவரை அனுப்பி வைத்து உதவுவதாகக் கூறினார். புதிது புதிதாக வரும் ஆள்கள்மீது எனக்கு நம்பிக்கையே இல்லை என்றாலும் அப்போதைக்கு வேறு வழியில்லை. ‘வரச்சொல்லுங்க’ என்றேன். வந்தவர் நாற்பதுகளில் இருந்தார். நெற்றியில் சந்தனக் குங்குமத் தீற்றல். ‘குணசீலர்போல... நம் நற்பேறு இது’ என்று மகிழ்ந்திருந்தேன். குழாயில் ஊற்றவேண்டிய அமிலக் கரைசல் மற்றும் பணிக்கருவிகளுடைய பையை ஓரமாக வைத்தார். ‘ஒரு இருநூறு ரூபாய் கொடுங்க... வேலை முடிஞ்சதும் கழிச்சிக்கலாம்’ என்றார். ஒரு மனிதனை இருநூறு ரூபாய்க்கு நம்பாமல் எப்படி ? கொடுத்தேன். 

வீட்டுச் சாலையில் இன்னும் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படவில்லை என்பதால் பிரதான இரும்புக் கதவருகில் முழங்காலளவுக் கருந்தண்ணீர் தேங்கியிருக்கும். வெளியே போனவர் வரத் தாமதமாகவே நான் யோசனைக்குள் ஆழ்ந்தேன். அரைமணி நேரம் கழித்து வந்தார். நடையில் ஒரு பின்னல் இருந்தது. ஆனால், நேராக வராமல் குழியில் தேங்கியிருந்த சாக்கடைக்குள் இறங்கி விழித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மேலேறும் முயற்சியில்

தத்தக்கா பித்தக்கா என்று முயன்றவர் ஒருகட்டத்தில் பொத்தென்று அதற்குள்ளேயே விழுந்து உட்கார்ந்துவிட்டார். இப்போது மார்பளவுத் தண்ணீரில் நீந்துகோலத்தில் காணப்பட்டார். எப்படியோ சுதாரித்து ஏறியவர் அதற்குமேல் ஒன்றும் முடியாமல் படுத்துவிட்டார். காசை வாங்கிக்கொண்டுபோய் முதல்வேலையாக மதுவுண்டு வந்திருக்கிறார். உப்படைப்பை நீக்க வந்தவர் பப்பரப்பா என்று படுத்துக்கிடக்கிறார். எல்லாரும் சேர்ந்து அவரைத் தூக்கியமர்த்தி பத்துக்குடம் தண்ணீரை மேலே ஊற்றி விதியை நொந்தபடி அவரைக் குளிப்பாட்டித் தெளிவித்து அனுப்பினோம்.

திருவள்ளுவர் ‘கள்ளுண்ணாமை’ என்ற அதிகாரத்தில் கடுமையாகக் கடிந்து எழுதியிருக்கிறார். ‘செத்த பிணம்’ என்று அவர்களை அழைக்கிறார். குடிப்பவர்கள் தங்களைத் தவணை முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்’ என்று சுந்தர ராமசாமி எழுதியது நினைவுக்கு வருகிறது. சமூகத் தீங்குகள் அனைத்திற்கும் ஆணிவேர் என்று குடிப்பழக்கத்தைச் சொல்ல வேண்டும். மதியை மயங்கச் செய்யும் மது மனித குலத்திற்கு விரோதமானது. 

தமிழ்நாடெங்கும் மது ஆறாக ஓடுகிறது. தனியொருவனுக்குத் தன்மீது கட்டுப்பாடு இல்லை. குடும்பங்கள் கடன்களில் தத்தளிக்கின்றன. கள்ளொழிக்க ஒருவழியும் புலப்படவில்லை. மதுவடிமை மனநோயாளிகளால் நிறைந்திருக்கிறது இந்நாடு.
‘கள்ளுண்பவர்கள் சோம்பித் தூங்குகின்றவர்களையும் செத்துப் பிணமானவர்களை விடவும் வேறல்லர். எப்பொழுதும் கள் குடிப்பவர்கள் நஞ்சு உண்பர்கள்தாம்.’ 
 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 

English Meaning - As I taught a kid - Rajesh
The people who are always sleeping, lethargic, not doing any work are no different from dead people because both are useless for anything. People who drink alcohol and other intoxicating beverages/drinks/narcotic drugs can be always considered as consuming poison because the drinks/drugs changes the chemicals in our blood and neurological systems thereby keeping one in a sleeping/lethargic state. It only harms the body. It doesn't do any good to the body.

Questions that I ask to the kid
Who is no different from a dead person? 
What is considered as drinking poison? 

2 comments:

  1. சமுதாயம் கள் உண்ணாமை மைக் கைக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்து எழுதி உள்ளீர்கள். ஆங்கில விளக்கமும் அருமை.
    வாழ்த்துக்கள்.
    வளர்க உங்கள் தொண்டு.
    அன்புடன்
    முத்துராமன்

    ReplyDelete