குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

குறள் 696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்
[பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள் 
குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

அறிந்து  - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

கருதி - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

வெறுப்பு - அருவருப்பு; சினம்; பகைமை; விருப்பமின்மை; துன்பம்; கலக்கம்; அச்சம்; செறிவு. 

இல - இல்லாதவற்றை

வேண்டுப - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேட்பச்வேட்பு - வேட்கை, விருப்பம்

சொலல் - சொல்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள் 
தன் ஆட்சியாளர் அல்லது மேலாளரிடம் எப்பொழுது எவ்வாறு ஒரு செய்தியை கூறவேண்டும்?

1. குறிப்பு அறிதல் - மேலாளர் / ஆட்சியாளர் எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கிறார். தான் சொல்ல வேண்டிய செய்தியை கேட்கும் மன நிலையில் அவர் இருக்கிறாரா என்பதை ஆராயவேண்டும். 

2. காலம் கருதுதல் - மன்னரின் மனநிலைக்கு ஏற்ப அதுபோல் அவருடைய சூழ்நிலைக்கு ஏற்ப அவருடைய எண்ணங்கள் இருக்கும். ஆதலால் மன்னரிடம் பேசக்கூடிய செய்தியை சொல்லக்கூடிய தக்க நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக கடும் நிதி நெருக்கடி காலங்களில் மன்னரிடம் சென்று நிதி உதவிகளை நாடக்கூடாது. 

3. வெறுப்பில் வேண்டுதல் - மன்னர் மன குழப்பத்தில் இருக்கும் பொழுதோ, பகைமை உணர்வில் இருக்கும் பொழுதோ, சினத்துடன் இருக்கும் பொழுதோ அவரிடம் சென்று அந்த சூழ்நிலைக்கு பொருந்தாதவற்றை பேசக்கூடாது. அதுப்போல மன்னருக்கு வெறுப்பினை ஊட்டும் எதையும் பேசக்கூடாது. தவறு எனில் சுட்டிக்காட்டலாம். ஆனால் வெறுப்பினை ஊட்டும் முறையில் கூறக்கூடாது. ஏனெனில் இறுதியில் மன்னரே முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்.

மேல்சொன்னவற்றை கருத்தில் கொண்டு தக்க சூழ்நிலையில் தக்க காலத்தில் மன்னர் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது தனக்கும் தன் மக்களுக்கும் பயனுள்ளவற்றை செய்துகொள்ள வேண்டும். 

இது பிறருடன் சேர்ந்தொழும் எல்லோருக்கும் பொருந்தும். 

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கி¢ன்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக. (குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க. இது சொல்லுந் திறம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.

No comments:

Post a Comment