பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

குறள் 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள்.

காலம் - நேரம், பொழுது, பருவம், சமயம்,  தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்;

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

இடனொடு - இடன் இடம், அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்.
இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

ஐந்தும் - ஐந்து

இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

தீர - முற்ற; மிக.

தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

எண்ணிச்  - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள் 
ஒரு செயலை செய்யும் முன் கீழ்காணும் ஐந்திணை ஆராய்ந்து எண்ணி அவற்றுள் அறியாமை குற்றங்கள் நீக்க வேண்டும். இவற்றில் எவ்வித குழப்பமும், ஐயப்பாடும், மயக்கமும் இருத்தல் கூடாது.  அதன் பின்பே அச்செயலை செய்யவேண்டும். 

1. பொருள் - செயலிற்கு தேவையான  செல்வம் அதாவது பொருள் ஆகியவற்றை ஆராய்ந்து கணக்கிட வேண்டும் 

2. கருவி - செயலிற்கு தேவையான கருவிகள் / சாதனங்கள், திறன்கள் ஆகியவற்றை வல்லுனர்களுடன் ஆலோசித்து அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் கருவிகள், திறன் ஆகியவற்றில் ஏதாவது குற்றம் குறை இருப்பின் அவற்றை கலையவேண்டும். 

3. காலம் - செயலை செய்வதற்கான தக்க காலத்தை/பருவத்தை ஆராயவேண்டும். செய்யக்கூடாத நேரத்தையும் ஆராயவேண்டும். செயல் செய்து முடிக்க தேவையான சரியான அளவு காலத்தையும் கணக்கிட வேண்டும். செயல் முடிக்க வேண்டிய (அதாவது தேவை) காலத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். 

4. வினை  -  செயல் செய்வதற்கான திட்டம்  வியூகம் ஆகியவற்றை நன்கு ஆராயவேண்டும். அவற்றில் ஏதேனும் குற்றம் இருக்கிறது என்று ஆராய வேண்டும். திட்டமிடப்படாத தோல்விகளை இடையூறுகளை சமாளிக்க ஆவனவற்றை திட்டமிட வேண்டும். 

5. இடம் - செயலை செய்வதற்கான ஏற்ற இடத்தை தேர்வு செய்யவேண்டும். அவ்விடத்தில் மேற்சொன்ன நான்கும் பொருந்துமா என்று பார்க்க வேண்டும்.

இக்கருத்தோடு இயைந்து கம்பரும் தனது கம்பராமாயண மந்திரப்படலப்  (8)பாடலில், “காலமும் இடனும், ஏற்ற கருவியும் தெரியக் கற்ற நூலுற நோக்கித் தெய்வம் நுனித்தறம் குணித்த மேலோர்” என்பார்

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. (எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும்¢ பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக. இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும், 4. வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டுதலின் முற் கூறப்பட்டன.

மு.வரதராசனார் உரை
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.


Thirukkural - Management - Decision Making
In addition to the four components of decision making highlighted in Kural 471, Kural 675 suggests 
that five more weapons are also important for effective decision-making.
675)
Five things should be pondered over before you act
Resources, weapons,  time, place and deed

They are: 1) Right resources, 2) Right tools and techniques, 3) Right time, 4) Right action, and 5) Right place. If a person executes a task after analyzing all the above five, he will be a successful executive. Decide and execute.

No comments:

Post a Comment