நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

குறள் 407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
நுண் - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.

மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

நுழை - சிறுவழி; பலகணி; குகை; துளை; நுண்மை; புத்திநுட்பம்.

புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.

இல்லான் - illāṉ   n. இல்². Poor man, onein want; வறியவன். இல்லானை யில்லாளும் வேண்டாள் (நல்வ. 34). 

எழில் - அழகு; இளமை; வண்ணம்; தோற்றப்பொலிவு; உயர்ச்சி; பருமை; குறிப்பு; சாதுரியவார்த்தை; வலி.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

மண்நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

புனை - அழகு; பொலிவு; அலங்காரம்; அணிகலன்; கால்விலங்கு; சீலை; புதுமை; நீர்

பாவை - பொம்மைபோன்றஅழகியபெண்; பதுமை; அழகியஉருவம்; கருவிழி; பெண்; குரவமலர்; காண்க:பாவைக்கூத்து; நோன்புவகை; திருவெம்பாவை; திருப்பாவை; இஞ்சிக்கிழங்கு; மதில்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது

முழுப்பொருள்
கூர்மையாக நூல்களை நுணுகி ஆராய்ந்து நுட்பமான அறிவு இல்லாதோர் மண்ணினால் செய்து வண்ணம் பூசி காட்சிக்கு வைக்கப்பட்ட பொம்மை ஆகும். அப்பொம்மைக்கு வேறு பயனேதுமில்லை. அது ஒரு உயிர் அற்ற ஜடம். 

இது கல்லாதவர்களுக்கு எவ்வளவு பொருந்துமோ அதே போல் அலங்காரத்திற்காக படித்தவர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக பி.எச்.டி (PhD), எம்.பில் (M.Phil), எம்.பி.ஏ (MBA), மற்றும் இதர பல படிப்புகளை வெறுமென பட்டத்திற்காக படித்துவிட்டு அப்பட்டங்களை வெளியே தகவல் பலகையில் அலங்காரத்திற்காகவும் வெளியே கர்வத்திற்காக கூறிக்கொள்ளவும் கூறிக்கொள்வதில் எப்பயனும் இல்லை. நுணுகி ஆராய்ந்து படித்து அதற்கு ஏற்றவாரு செயல்புரிந்தால் தான் அதற்கு பயன்.  

முக்கியமான இரண்டு விஷயங்கள் 
1. அலங்காரத்திற்காக படிக்காமல், நுணுகி ஆராய்ந்து பெறுவதே அறிவாகும் 
2. கல்லாதவர் மண்ணினால் செய்து வண்ணம் பூசப்பட்ட பொம்மை. அலங்காரத்திற்கு மட்டுமே உதவும். வேறு பயனேதுமில்லை.

நாலடியார் பாடல் ஒன்று புற அழகு அழகல்ல என்றும் கல்வியே அழகென்று கூறுகிறது:
“குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்
கல்வி அழகே அழகு.” (நாலடியார் 131)

சிறுபஞ்சமூலம், சங்ககாலத்தையொட்டிய பதினெண்கீழ்கணக்கின் படைப்பு, இக்குறளை அடியொட்டியிடும் பாடலிது:
மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்சமூலம் 36)

எளிமையான சொற்களின் அமைப்பில் சொல்லப்பட்ட இப்பாடலே கல்வி தரும் வனப்பைச்சொல்லி, நூலறிவின்மையை வனப்பல்ல என்கிறது.

மற்றொரு கீழ்கணக்கு நூலான ஏலாதியிலும் இக்கருத்து சொல்லப்படுவதைப் பார்க்கலாம்
இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு. (ஏலாதி 74)
இரண்டு பாடல்களும் ஒரேபோல் இருப்பதைப் பார்க்கையில் ஒரு புலவரை அப்படியே மற்றொருவர் பிரதி எடுத்தாற்போல இருக்கிறது. ஒருவரின் நுண்மாண் நுழைபுலமும், மற்றொருவரின் களவாடலும் தெரிகிறது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், மண், மாண் புனை பாவை அற்று - சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.
(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும். இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

சாலமன் பாப்பையா உரை
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who has understood the concept and has gained knowledge can use the knowledge for something. A person who has a diploma but hasn't learnt it well or forgotten what they learnt is similar to a clay doll and his or her diploma is like doll in a showcase.

Questions that I ask to the kid
How should we study? 
What comes to your mind when you see a well dress doll?
Does a Degree certificate hold a value if you didn't practice what you studied?

1 comment:

  1. Since this deals with " akam" and " Puram" there must be a close link between சங்கம் and திருக்குறள்! We must explore it deeply. 😀

    ReplyDelete