சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

குறள் 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
சுவை - ஐம்புலன்களுள்நாவின்உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின்இரசம்; சித்திரைநாள்.

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்

ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்.

ஓசை - ஒலி; எழுத்தோசை; செய்யுளோசை; வான்என்னும்பூதம்தோன்றுவதற்குக்காரணமாகியஏழுதன்மாத்திரை; புகழ்; இரைச்சல்; மிடற்றொலி; சொல்; பேச்சு; இயம்; பாம்பு; வாழை.

நாற்றம் - மணம்; மூக்கால்அறியும்புலனறிவு; தீநாற்றம்; கள்; தொடர்பு; தோற்றம்.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஐந்தின் - ஐந்து

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

தெரிவான்கட்டே - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
ஐந்து புலன்களான சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகியவற்றின்  தன்மை, வலிமை, அவை பிறக்கும் வழிமுறைகள், அவை செய்யும் தந்திரங்கள், அவை பிறப்பதற்கான காரணங்கள் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து அவற்றை அறுத்து கடப்பவனுக்கு இவ்வுலகு வசப்படும். ஏனெனில் ஐந்துபுலன்களும் ஆசைகள் உண்டாக காரணமாக அமைகின்றன. ஆகவே ஐந்து புலன்கள் மூலம் வரும் ஆசைகளை  ஒருவன் அறுக்க வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உன் னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகும் ஐவீர்” (அப்பர்.திருஆரூர் 4)

“ஆமே சுவையொளி யூறோசை கண்டவன்” (திருமந் 1350)

“சுவையொளி யூறோசை நாற்றம் தோற்றம்” (திருவொற்றியூர் ஒருபா ஒருபது 9:23)

“மன்னிய மோகச் சுவையொளி யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்கும்” (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 5)

பரிமேலழகர் உரை
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.

மு.வரதராசனார் உரை
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
 ஆசையற்றவனுக்கே அனைத்தும் வசப்படும்.

No comments:

Post a Comment