நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

குறள் 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
நெடுங் - நெடும் - நெடுமை - நீளம், உயரம், காலம்முதலியவற்றின்நீட்சி; பெருமை; அளவின்மை; ஆழம்; கொடுமை; பெண்டிர்தலைமயிர்; நெட்டெழுத்து.

கடலும் - கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

தன் - தன்னுடைய

நீர்மை - நீரின்தன்மை; தன்மை; சிறந்தகுணம்; எளிமை; அழகு; ஒளி; நிலைமை; ஒப்புரவு.

குன்றும் - குன்றுதல் - kuṉṟu-   5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல் 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல் குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல் அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.

தடிந்து - தடிதல் - வெட்டுதல்; அழித்தல்; குறைத்தல்.

எழிலி - மேகம்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காது - கொடுக்காது ; விரும்பாது ; தாமதிக்காது; வளர்க்காது அருள் செய்யாது 

ஆகிவிடின்  - ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

முழுப்பொருள்
கடல் தண்ணீரால் ஆனது. அக்கடலுக்கு நீர் ஆறுகள் மூலமாக வந்து சேருகிறது. ஆறுகளுக்கு நீர் காடுகளில் மரங்கள் தேக்கிவைக்கும் நீரில் இருந்து வரும். அது மழையில் இருந்து வரும். அது மேகத்தில் இருந்து வரும். 

"தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்"

மேகம் கடலில் இருந்து தண்ணீரை ஆவியாக பெற்றுக்கொள்ளும் அல்லது (water  spout) மேகம் முகர்ந்து(அள்ளும்) எடுத்துக்கொள்ளும். அப்படி நடக்காவிட்டால் மழை கிடைக்காது. 


water spout

உலகில் மூன்றில் ஒரு பாகமான நீண்ட கடலானது கூட வற்றிப்போய் விடும் மழை பெய்யாவிட்டால். ஆதலால் மழை இன்றியமையாது. மழை இல்லாவிட்டால் செடி கொடிகள் காய்கறிகள் விளைவிக்க முடியாது. பசும்புல் கூட முளைக்காது. மழை இல்லாவிட்டால் விலங்குகள் கூட உயிர் வாழ முடியாது. கடல் குன்றி வற்றிப்போனால் கடல் நீரின் செறிவு (concentration) அதிகமாகி  கடல் உயிரினங்களும் அழிந்துபோகும். ஆதலால் மனிதனுக்கு உணவு கிடைக்காது. ஆதலால் கடல் மழை பெய்யவில்லையென்றால் இங்கே உயிர்கள் வாழமுடியாது. உலகத்தை உயிர்ப்புடன் வைக்க மழை இன்றியமையாததாகும். 

”நெடுங்கடலும்” என்ற மிகப்பெரும் சொல்லாட்சியோடு தொடங்குகிறது குறள். கடல் என்றாலே பெரிது தான். ஆனால்  இயற்கையின் பெருண்மையை அடிக்கோடிட “நெடுங்கடல்” என்று கூறுகிறார் திருவள்ளுவர். மேலும் “உம்” என்ற விகுதியை வேறு சேர்த்துவிடுகிறார். பெரிய கடல்தானே அதிலே கொஞ்சம் குப்பையைப் போட்டால் என்ன ஆகப்போகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு அன்றே விடை கூறியுள்ளார் வள்ளுவர். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் தன்மை வேறுபடும் வாய்ப்புகள் உண்டு.

“தன்னீர்மை” எனும் அடுத்த சொல் இன்னும் வியப்பளிக்கும். இன்றைய அறிவியல் செய்தியென நாம் நினைக்கும் ஒன்று பற்றிய, அன்றைய அறிவின் வெளிப்பாடு இந்தச் சொல். பொதுவாக நீர்மங்களின் அமில, காரத் தன்மையை இன்று pH என்று அளவிடுகிறோம். நல்ல நீரின் pH 7 என எடுத்துக்கொள்ளப்பட்டு மற்றைய நீர்மங்களின் pH அளவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அதன்படி கடல் நீரின் pH மதிப்பு 7.4 முதல் 8.3 வரை இருக்கும். இது அதிகமானால் கடலுக்கு ஆபத்து. அதாவது கடல் வாழ் உயிர்களின் வாழ்கை பாதிப்புக்கு உள்ளாகி அழிந்து மடியும். இந்த மாறுபாடுகள் நிகழ்வது கடலில் ஆறுகளால் கொண்டுவந்து சேர்க்கப்படும் உப்பு மற்றும் தனிமங்களால் தான். 

அதுமட்டுமா இவ்வளவு உப்புச் சுவைக்குக் காரணம்?
இலை. வேறு இரண்டு காரணங்கள் கடலில் நிகழ்கின்றன. கடலுக்கு அடியில் உள்ளப் புவி மேலோட்டிலிருக்கும் வெடிப்புகள் வழியாக உள்ளே சொல்லும் கடல் நீர் அங்கே சூடாகி அங்குள்ள தனிமங்களைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் வெந்நீர் ஊற்றுகள் வழியாக மீண்டும் கடலில் சேருகிறது. இது மட்டுமல்ல கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் வெளியிடும் சூடான பாறைகளின் வேதிப்பொருட்களும் கடலில் கலக்கின்றன. மேலும் காற்றின் வழியாகவும் நிலத்திலிருந்து துகழ்கள் கடலில் சேருகின்றன.

இப்படிச் சேரும் உப்புகள் எங்கே செல்கின்றன?? கடல் எப்படி சீராக இருக்கிறது?

பல வகை உப்புகள் கடல் வாழ் உயிரிகளால் உறிஞ்சப்படுகின்றன. காட்டாக, பவழ பாலிப்புகள், மெல்லுட்டலிகள், ஓட்டுடலிகள் ஆகியவை உப்பிலுள்ள கால்சியத்தை உட்கொள்கின்றன; இதை உபயோகித்து தங்கள் ஓடுகளையும் எலும்புக்கூடுகளையும் அவை உருவாக்குகின்றன. இதுப்போலவே மற்றைய உயிர்களும் உப்புகளை எடுத்துக் கொள்கின்றன. இப்படியே ஒரு சுழற்சி நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆறுகள் நன்னீரைக் கொண்டு க்டலில் சேர்க்காவிட்டால் உப்புத்தன்மை அதிகமாகிவிடும். இதுப்போலவே அமிலத்தன்மையும். நாம் வளர்ச்சி என்ற பெயரில் வெளியிடும் கரியமில வளி கடலில் அமிலத்தன்மையை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது புவிமேலாட்டு நகர்வுகளை வேகப்படுத்தக் கூடும் என்று இன்றைய அறிவியலாளர்கள் எண்ணுகிறார்கள். இந்நிலையில் வள்ளுவர் காலத்தைவிட இப்பொழுது ஆறுகள் கடலில் கலக்கவேண்டியது இருமடங்கு கட்டாயமாகிறது.

அமிலமா, காரமா என்று ஐயப்பாடு இல்லை வள்ளுவருக்கு. அவர் “தன்னீர்மை” என்றே குறிக்கிறார். நீர்மைத்தன்மை “குன்றும்” என்கிறார். 

எப்பொழுது?

“தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்”

எழிலி என்றால் மேகம். தடித்து என்பதற்குத் திரளுதல், மின்னல் என இரு பொருட்களையும் சொல்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி. எனில் திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் என்று பொருளாகிறது. “நல்குதல்” எனில் பெருங்கொடை. “தடிந்தெழிலி” யால் தான் கடலில் நீர் கொண்டு சேர்க்கும் பெருங்கொடையாகிய பெருமழையைத் தரமுடியும். சிறு மேகங்கள் பொழிந்தால் நிலத்தோடு மழை நின்றுவிடும். நிலத்தின் உப்புகளைக் கடலில் சேர்க்க இயலாது போகும். “தடிந்தெழிலி தான் நல்குவது” வள்ளுவர் சொல் ஆளுமைக்கு இன்னொரு சான்று.

பெருமை பெய்து ஆறுகள் வழியாக உப்பும் நீரும் கடலில் கலக்காவிடில் கடலில் நீர்மை குன்றிவிடும். 

”அடர்த்தி” அல்ல ”நீர்மை” குறையும் என்கிறார். “நீர்மை” குறைந்தால் “அடர்வு” அதிகமாகும். உயிர்கள் வாழ்வு சிக்கலாகும். இது நீரியல் சுழற்சி பற்றி அறிந்திருந்த அறிவு மரபின் தொடர் வெளிப்பாடே. உலகின் உயிர் சுழற்சிக்குக் கடல் முக்கியப் பங்காற்றுகிறது. கடலுக்கு மழை நீரையும் உப்பையும் கொண்டு சேர்க்கிற பொறுப்பு ஆறுகளுக்கு இருக்கிறது. 

போய்வா மகளே. கடலில் கலந்து, மழையென், குடகில் பிறந்து மறுபடி வா. நிலத்திலும் கடலிலும் அடுத்தத் தலைமுறை காத்திருக்கிறது உனக்காக.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வேட்டம்பொய் யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது” (நற் 38:1-2)

“நிறையுறும் பௌவம் குறைபட முகந்துகொண்டு....
கொண்மூ.... பொழிந்தென” (குறிஞ்சி 47-53)

“நீண்டொலி யழுவங் குறைபட முகந்துகொண்
டீண்டுசெலற் கொண்மூ வேண்டுவயிற் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூல்முதிர்பு
உருமுரறு கருவியொடு பெயல்கட னிறுத்து” (புறநா 161:1-4)

பரிமேலழகர் உரை
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.

மு.வரதராசனார் உரை
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

சாலமன் பாப்பையா உரை
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மழை பொய்த்தால் கடல்வளம் குன்றும்.

No comments:

Post a Comment