மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

குறள் 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
மாலை  - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

மணத்தல் - மணம்புரிதல்; புணர்தல்; கூடியிருத்தல்; அணைத்தல்; கலத்தல்; வந்துகூடுதல்; நேர்தல்; பொருந்துதல்.

மணந்தார் - திருமணம் செய்துக்கொண்டு கூடியவர்

அகலுதல் - நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல்

அகலாத - நீங்காத ; பிரியாத

காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

இலேன் - இல்லை

அறிந்ததிலேன் - அறிந்தது இல்லை நான்

முழுப்பொருள்
அந்திமாலைப்பொழுது காதலிக்கு மிகுந்த துன்பத்தை தருகிறது. ஏனெனில் காதலியை மணந்த தலைவன் காதலியை விட்டு வேலை நிமித்தமாக பிரிந்து சென்றுவிட்டான். ஆதலால் காதலி நினைக்கிறாள் அவர் என்னைவிட்டு அகலாமல் என்னுடன் இருந்த பொழுதெல்லாம் எனக்கு இன்பமாக இருந்தது. அப்பொழுது எனக்கு தோன்றவில்லை இவர் என்னை விட்டு பிரியக்கூடும் என்று. அவர் பிரிந்தால் எனக்கு மாலைப்பொழுது இப்படிப்பட்ட துன்பத்தை நோயாக தரும் என்று நினைக்கவில்லை.



”நோயொடு புகுந்து கல்லென் மாவை நீங்க” (மதுரைக் 557-8)

கீழே சொல்லப்படும் குறுந்தொகைப் பாடல் வரிகள் இதே நிலையைச் சுட்டுவதைக் காணலாம்.

“சிறுபுள் மாலை யுண்மை
அறிவேன் தோழியவர்க் காணா வூங்கே” (352:5-6)

“தண்ணந் துறைவன் தணவா வூங்கே
வாலிழை மகளிர் விழவணி கூட்டும்
மாலையோ அறியேன் மன்னே மாலை” (386:2-4)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

சாலமன் பாப்பையா உரை
முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

No comments:

Post a Comment