தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]

பொருள்
தொடலைக் - தொங்கவிடுகை; மாலை; மகளிர்விளையாட்டுவகை; மணிக்கோவைகளால்தொடுக்கபட்டமேகலை.

தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.

குறுந்தொடி - kuṟu-n-toṭi   n. id. +. Maidenwearing small bracelets; சிறுதொடியினைப்பூண்டபெண். தொடலைக் குறுந்தொடி (குறள், 1135).  

தந்தாள் - கொடுத்தாள் தலைவி 

மடல் - பனைமுதலியவற்றின்ஏடு; தோண்மேலிடம்; கை; ஏற்றக்கழி; பனங்கருக்கு; காண்க:மடன்மா; உலாமடல்; பூவிதழ்; கிளை; சிறுவாய்க்கால்; கண்ணிமை; திருநீறும்சந்தனமும்வைக்குங்கலம்; சோளக்கதிர்முதலியவற்றின்மேலுறை; காதுமடல்; ஆயுதவலகு.

மடலொடு - மடலுடன்

மடலூர்-தல் - தான் காதலித்ததலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலானகுதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல்.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

உழக்கும் - uḻa-   4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52). 

துயர் - துன்பம்; அரசர்க்குஉரியசூதுமுதலாகியவிதனம்.

முழுப்பொருள்
பூமாலைப்போல் தொடர்வரிசையாக கையில் வளையல்கள் அணிந்திருக்கும் என் தலைவி எனக்கு மடல் என்ற காதல் நோய்யை தந்தாள் மேலும் அந்திமாலைப்பொழுது எண்ணில் உழக்கும் துயருக்கும் காரணமானாள். அதாவது பகல் பொழுதில் மடலால் தவிக்கிறான் தலைவன். மாலை மற்றும் இரவு பொழுதில் மாலை தரும் துயரால் தவிக்கிறான். 

பகலும் மாலையும் தொடர் சங்கிலியாக அவனை வருத்துகிறது. அதனை தந்தவள் தலைவி.

இதே கருத்தை கலித்தொகை (138:12-3) வரிகள் கூறுவதையும் பார்க்கலாமே!

“படரும் பனையீன்ற மாவும் சுடரிழை நல்கியாள் நல்கியவை” என்பார் அப்பாடலாசிரியர்; இதற்கு உரை ஈந்த நச்சினார்க்கினியர் இவ்வாறு கூறுவார் – “விளங்குகின்ற இழையினையுடைய, என்னாலே காமிக்கப்பட்டவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும் வருத்தத்தாலுண்டான பனையீன்ற மடலாற் செய்த குதிரையும்.”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன'? என்றாட்குச் சொல்லியது.) மாலை உழக்கும் துயர் மடலொடு - மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும், முன் அறியேன்; தொடலைக் குறுந்தொடி தந்தாள் - இது பொழுது எனக்கு மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள். (காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அது பற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள் தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்' என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள். தொடலை யென்பதற்குச் சோர்ந்த வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.


மு.வரதராசனார் உரை
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

சாலமன் பாப்பையா உரை
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

No comments:

Post a Comment