காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

குவளை - கருங்குவளை; செங்கழுநீர்ப்பூ; ஒருபேரெண்; அணிகளில்மணிபதிக்குங்குழி; கடுக்கன்குவளை; மகளிர்கழுத்தணிவகை; கண்குழி; ஒருவகைப்பாண்டம்; கண்ணின்மேலிமை; பாண்டத்தின்விளிம்பு.

கவிழ்ந்து - கவிழ்தல் - தலைகீழாதல்; நாணம்முதலியவற்றால்தலையிறங்குதல்; குனிதல்; நிலைகுலைதல்; அழிதல்; முழுகிப்போதல்.

நிலன் - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை

நோக்கும்நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

இழை - நூல்; நூலிழை அணிகலன் கையிற்கட்டுங்காப்பு.

மாணிழை - அழகிய அணிகளை அணிந்த பெண்ணவளின்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஒவ்வுதல் - இணங்குதல், பொருந்துதல்; இசைதல்; ஒத்திருத்தல்

ஒவ்வேம் - ஒப்பில்லா

என்று - என்று

முழுப்பொருள்
என் காதலியின் கண்கள் எப்படிப்பட்ட அழகுவாய்ந்தது என்று தலைவன் கூறுகிறான்.  குவளை மலர்களுக்கு காணும் ஆற்றல் இருந்தால் அவை என் காதலியின் கண்களை கண்டு இவ்வழகிய கண்கள் இவளுக்கு எப்பேர்ப்பட்ட அணிகலனாக இருக்கிறதே என்று நினைப்பதுமட்டும் அல்லாமல் நாம் எப்பொழுதும் அக்கண்களுக்கு ஒப்பாகமாட்டோம் என்று நாணம் கொண்டு அக்குவளை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.) குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல் தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும். (பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.) .

மணக்குடவர் உரை
குவளைமலர் காணவற்றாயின் மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும். இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.

மு.வரதராசனார் உரை
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

சாலமன் பாப்பையா உரை
குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.

No comments:

Post a Comment