கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
கூற்றமோ - கூற்றம் - பகுதி; கொடும்பகைவன், யமன்; அழிவுண்டாக்குவது; நாட்டின்பகுதி; சொல்.

கண்ணோ - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பிணையோ - பிணை - இணைக்கப்படுகை; உடன்பாடு; பொருத்து; கட்டு; உத்தரவாதம்; விலங்குகளின்பெண்; பெண்மான்; பூமாலை; புறந்தருகை; விருப்பம்; தெப்பம்.
பிணையோ - பிணை - (வி)பிணையிடு; கட்டு.

மடவரல் - பெண்; மடப்பம்
மடப்பம் - பேதைமை; மென்மை; இணக்கம்; ஐந்நூறுஊருக்குத்தலையூர்; அரண்மனையிற்பெண்; மருதநிலத்தூர்.

நோக்கம் - கண்; பார்வை; கிரகநோக்கு; தோற்றம்; உயர்ச்சி; அழகு; காவல்; கருத்து; அறிவு; கவனம்; விருப்பம்; குறிப்பு

இம் - இவை 

மூன்றும் - மூன்றும் 

உடைத்து -  உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
என்னை கொள்ளும் யமனோ? என்னுடைய மேனி முழுவதும் படரும் கண்ணோ? அல்லது பயம் தெரியும் பெண்மானா? என்று அறியிலேன் நான். ஏனெனில் என்மீது இந்த பெண்ணின் பார்வை நான் சொன்ன மூன்றையும் கொண்டது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேற் கண்ணோ கடுங்கூற்றம்” (சிலப் 7:12)

“ஒன்றே உயிரை உடையீர் ஒருவிப் போமின் இவள்கண்
அன்றே கூற்ற மாகி அருளாது ஆவி போழ்வது” (சீவக 917)

“கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழிகொண்டாள்” (கம்ப.மிதிலைக் காட்சி 32)

“கூற்றுறழ் நயனங்கள்” (கம்ப.உண்டாட்டு 21)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது. (இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.).

மணக்குடவர் உரை
கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து. இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.

மு.வரதராசனார் உரை
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை
என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

No comments:

Post a Comment