மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

குறள் 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
[பொருட்பால், நட்பியல், மருந்து]

பொருள்
மாறுபாடு - பகைமை; வேறுபடுதல்; ஒவ்வாமை; புரட்டு

இல்லாத - இல்லை, வறுமை

உண்டி - உணவு; சோறு இரை பறவை விலங்கு இவற்றின்உணவு; உண்டிச்சீட்டு; கருவூலம் மாற்றுச்சீட்டு; காணிக்கைப்பெட்டி; கோயிலுக்குக்கொடுக்கும்பணம்; நுகர்ச்சி கொட்டைக்கரந்தை

மறுத்து - மறுபடியும்; மேலும்.
மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல்.

உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

ஊறுபாடு - துன்பம்; தீமை; புண்படுகை; காயம்; சேதம்.

இல்லை - இல்லை

உயிர்க்கு - இந்த உயிருக்கு, இந்த பிறவியிற்கு

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையல்லாத உணவினை உண்ணும் அளவிற்கு மேல் செல்ல மறுத்து அளவாக உண்டால் உணவினால் எவ்வித துன்பமும் இல்லை அவ்வுயிர்க்கு.

இக்குறளில்  இரண்டு விஷயங்களை காணலாம்
1. உடலிற்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாத உணவை உண்ண கூடாது
2. உடலுக்கு ஏற்ற உணவானாலும் அளவாகவே உண்ணவேண்டும்.

ஆயூர்வேத டாக்டர் இல்.மகாதேவன்/இல்.மஹாதேவன் (Ayurveda Dr. L.Mahadevan) அவர்கள் “முதற்கால்” என்றொரு நேர்காணல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
பொதுவாக நோய்களுக்குத் தான் பத்தியம். சேராங்கொட்டை போன்ற மருந்துகள் பயன்படுத்தும்போது அரிதாக மருந்திற்கும் பத்தியங்கள் உண்டு. நோய்களுக்குப் பத்தியம் மிக மிக முக்கியம். தொடக்க காலத்தில் நான் பத்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என சொல்லிக்கொண்டு இருந்ததுண்டு. ஆனால் இப்போது பத்தியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். ஆட்டோ இம்யூன் நோய்கள், அதாவது முடக்குவாதம் (rheumatoid) போன்ற, நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலின் சில திசுக்களுக்கு எதிராகச் செயல்படும் நோய்களுக்கெல்லாம் பத்தியம் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். பத்தியம் என்ற வார்த்தைக்கு சிகிச்சை என்று பொருள். ஸ்ரோதஸ்களுக்கு உகந்தது பத்தியம். இப்பொழுது ஆங்கில மருந்துகளிலுமே பத்தியம் பின்பற்றுகிறார்கள். சிறுநீரக நோயில் பொட்டாசியம், உப்பு சேர்க்கக் கூடாது, புரதத்தைக் குறைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள், சர்க்கரை நோயில் பிரக்டோஸ், மாவுச்சத்து உட்கொள்ளக் கூடாது என்கிறார்கள். தைராய்டு சுரபி குறைவாகச் சுரக்கும் நிலையில் முட்டைக்கோஸைச் சாப்பிடக் கூடாது. நன்மை பயக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும், தீமை பயக்கின்ற உணவுகளை நிறுத்த வேண்டும். இதுவே பத்தியம். ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று அன்றே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். அது மட்டுமல்ல; ’மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ எனும் குறள் பத்தியத்தைத்தானே உணர்த்துகிறது. பத்தியம் என்பது மறுத்து உண்ணல்தானே?

மேலும்: அஷோக் உரை

உணவை எப்படி உண்ண வேண்டும் என்பதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு - சொல்வளர்காடு-30-இல் ஒரு பகுதி இப்படி விவரிக்கிறது.

ஆனால் மறுநாள் காத்யாயனி “தந்தையே, எனக்கு யாக்ஞவல்கியர் முனிவரையே மணமகனாகப் பாருங்கள்” என்றாள். காத்யாயனர் வியந்து நோக்க “வேதத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களுக்கு பிறிதொரு தூய்மை தேவையில்லை என்று நேற்று உணர்ந்தேன்” என்றாள். “அவர் தன் தேவைக்குமேல் ஒரு பருக்கையும் உண்ணவில்லை. இலையில் ஒரு பருக்கையும் எஞ்சவைக்கவில்லை. ஒவ்வொரு கவளம் சோறும் பிறிதொன்று போலவே இருந்தன. ஒவ்வொரு கையசைவும் வாயசைவும் ஒருமைகொண்டிருந்தன. ஒவ்வொரு துளி உணவிலும் முற்றிலும் சுவையுணரப்பட்டது. உண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே” என்றாள்.

“ஆம், அவர் உணவில் சுவைகொண்டவர். ஊனுணவை விரும்பி உண்பவர் என்று சொல்லப்படுகிறது” என்றார் காத்யாயனர். காத்யாயனி புன்னகைத்து “நான் அவருக்கு வைத்த ஒரு கூட்டில் உப்பும் புளிப்பும் சேர்க்கவில்லை. வேப்பெண்ணையையே கலந்திருந்தேன். பிறிதொன்று இனியது. அவர் முகத்தில் இரண்டுக்கும் வேறுபாடே தெரியவில்லை. இரண்டிலும் சுவையறிந்தவர் பிரம்மத்தையே உண்கிறார்” என்றாள்.

நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
வள்ளுவர் இக்குறளுக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்

இம்மணிக்குறளை வையகம் வாழ நல்கினார். இயற்கைக்கு மாறுபாடி இல்லாத இயற்கை உணவினை அறிந்து, பிற உணவுகளை மறுத்து, அந்த இயற்கை உணவையே உண்பாரேயாயின் மக்கள் இனத்திற்கு மட்டுமன்றி எவ்வுயிருக்குமே என்றும் ஊறுபாடு-துன்பம்-துயரம்-நோய்-நொடி-சிதைவு-சீரழிவு எவையும் உண்டாகா என்று இக்குறள்  தெரிவிக்கின்றது. 

மாறுபாடு இல்லா உண்டி - 1) இயற்கைக்கு மாறுபடாத 2) உடலுக்கு மாறுபடாத 3) காலத்திற்கு மாறுபடாத 4) இடத்திற்கு மாறுபடாத உணவு - இயற்கை உணவே

அந்தந்த இடங்களில் அந்தந்தப் பருவங்களில் கிடைக்கும் உடலுக்க்கு ஏற்ற இயற்கை உணவுகள் - கனிகள் - காய்கள்.

மறுத்து - (1) அளவோடு (2) உண்ணா நோன்போடு - இயற்கை உணவுகளை அளவோடும் இடை இடையே உண்ணா நோன்போடும்.
உண்ணின் - ஐயப் பொருளில் அதன் கடினம் சுட்டியது. நன்மையின் உயர்வும் சுட்டியது.

ஊறுபாடு - உண்டாகிய, உண்டாகின்ற, உண்டாகும் துன்பங்கல் - தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் துன்பங்கள் - நோய்கள்.
உயிர்க்கு - மக்களுக்கு மட்டுமன்றி, எல்லா உயிர்க்கும் இந்நெரியே நோயற்ற வாழ்வை நல்கும்


மேலும்
இயற்கை வாழ்வே இனிய நல்வாழ்வு!
தேங்காய் வாழைப்பழம் சிறந்த மனித உணவு!
கனிகளை உண்டு பிணியின்றி வாழ்வோம்!
வெயிலில் தோய்க! மழையில் நனைக!
காற்று மிக சிறந்த நுண் உணவு!
ஒரு வேளை ஒரு வகை கனியே உயர்வு!
உண்ணா நோன்பு உயரிய மருந்து!
மருந்துகள் யாவும் நச்சுப் பொருள்களே!
உப்பு ஒரு கூட்டு நஞ்சு!
ஒரு வேளை உண்பான் யோகி!
இரு வேளை உண்பான் போகி!
- புலவர் திரு.மு.இராமகிருட்டிணன்
- உலக நல்வாழ்வு ஆசிரமம் , சிவசைலம், திருநெல்வேலி


பரிமேலழகர் உரை
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது. (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.

மு.வரதராசனார் உரை
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

No comments:

Post a Comment