கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

குறள் 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

அறியாமை - அறியாத்தன்மை; மடமை

உடைத்தே - உடைத்து - உடையது; இருக்கும்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கொடுத்து - கொடுத்தல் - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை.

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

அறியாமை -  அறியாத்தன்மை; மடமை

கொளல் - அதனை கொள்ள வேண்டும்

முழுப்பொருள்
கள் உண்டால் அதன் விளைவாக துன்பத்தையும் பெரியோர் இகழ்ச்சியையும் மதி குறைதலையும் அறியாத அறிவை உடையவர் கள்ளினை விலை கொடுத்து வாங்கி பருகினால் அவர்கள் உண்மையான பேதைமையை வாங்கிக்கொள்ளுகிறார்கள் என்று அர்த்தம். அதாவது கள் அறிவை வளர்க்காது அறியாமை வளர்த்தெடுக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல் - ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து - அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. (தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநா-209) என்பதனானும் அறிக. அறிவார் விலை கொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால் தீயது கொள்ளாமையின்,மெய்யறியாமை கொளல் முன்னை அறியாமையான் வந்தது என்பதாம்.).

மணக்குடவர் உரை
பயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல். இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.

மு.வரதராசனார் உரை
விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

No comments:

Post a Comment