முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

குறள் 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
முகத்தின் - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

இனிய - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

நகாஅநகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

அகத்து - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

இன்னா -  துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

வஞ்சரை - வஞ்சர் - வஞ்சகன் - சூழ்ச்சிக்காரன்; ஏமாற்றுபவன்; கயவன்; நரி.

அஞ்சுதல் -  பயப்படுதல்

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

முழுப்பொருள்
நம்மை காணும் பொழுது நம்மிடம் சிரித்து பேசி மகிழ்ந்து நமக்கு இனியவராக தோற்றுவித்துக்கொண்டு ஆனால் மனதளவில் நம்மை வஞ்சிக்க சூழ்ச்சி செய்வோரை நாம் அஞ்சவேண்டும். மனதால் நம்மை வஞ்சிக்க நினைப்போர் நம் பகைவர். பகை இருந்தால் நம் சிரிப்பும் மகிழ்ச்சியும் குறையும்.

அறநெறிச்சாரப் பாடல் ஒன்று இக்கருத்தையே நையாண்டியாக இவ்வாறு கூறுகிறது. தேவர்கள் விழித்தகண்மூடாமல் நிற்பதற்குக் காரணம், எதிரில் நின்று, உருகுமாறு வாயால் இன்சொற்கூறி ஒருவரைப் புகழ்ந்து, அவர் அகன்ற பின்னர், அவரையே இகழ்ந்து கூறுகின்ற, கயவர்களைக் கண்டு, கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே யாகும். இனி அப்பாடல்:

முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்துப்-பின்னின்
றிழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை (அறநெறி.48)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும். (நகையது வகை பற்றி 'இனிய' என்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முகத்தால் இனியவாக நக்கு மனத்தால் இன்னாதவாக நினைக்கும் வஞ்சகரை அஞ்சவேண்டும்.

மு.வரதராசனார் உரை
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.

No comments:

Post a Comment