துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

குறள் 586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார்; பற்றுவிட்டமுனிவர்

படிவத்தர் - படிவர் - முனிவர்.

ஆகி - ஆகுதல் - ஆதல்

இறந்து - இறந்துபடுகை; சாவு

இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

ஆராய்ந்து - ஆராய்தல் - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்; ஆய்வு; பரிசீலனம்; சோதனை தலையாரி

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்

செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

இலது - இல்லை

ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்

முழுப்பொருள்
ஒரு ஒற்றர் எப்படியெல்லாம் செயல்படவேண்டும்? தேவையெனில் துறவறம் வேடம் தரித்து முனிவர் போல் நடித்து தேவையான செய்திகளை அறியவேண்டும். ஆனால் மற்ற நாட்டவரிடம் (அல்லது பகைவரிடம்) பிடிபட்டால் அவர்கள் நெறிமீறி துன்பங்கள் (சித்ரவதை) செய்தாலும் மனதில் தளர்ச்சியடையாமல் தன்னுடைய நாட்டை காட்டிக்கொடுக்காமல் இருத்தல் வேண்டும். 

சீவகசிந்தாமணி (1845) படிவம் என்பதை வேடம் புனைதல் என்ற பொருளில் கையாளுகிறது. “பாத்தில்சீர்ப் பதுமுகன் படிவவொற்றாளர் சொற் கோத்தென்ன” என்னும் வரிகள் கூறுவது இதுவே: “நீக்கம் இல்லாத புகழையுடை பதுமுகன் மறைந்த வேடங்கொண்ட ஒற்றர் ஒருவர் கூறிய சொற்கு மற்றும் இருவர் சொல்லும் சேர்ந்தது என்று கருதி”

“படிவ ஒற்றின் பட்டாங்கு உணர்ந்து” (பெருங் 3.35:8)

“கல்விக்கண் மிக்கோன் சொல்லக் கருமன நிருதக் கள்வர்
வல்விற்கை வீர மற்றிவ் வானரர் வலியை நோக்கி
வெல்விக்கை அரிதென் றெண்ணி வினையத்தால் எம்மை யெல்லாம்
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்குநாம் கொள்க என்றார்” (கம்ப.ஒற்றுக் 30)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து - முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று - ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
(விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு.

மு.வரதராசனார் உரை
துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

No comments:

Post a Comment