தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

குறள் 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
தக்கார் - தரமும், தகவும் (நடுவாண்மை குணநலம்); மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்.

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

இனத்தனாய் - இனத்தான் - உறவினன்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

ஒழுக - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வல்லானைச் - வல்லான் - வலிமையுள்ளவன்; திறமையானவன்; கடவுள்; சூதாடுபவன்.

செற்றார் - பகைவர்

செயக்கிடந்தது -செய்யக் கூடியது

இல் - ஒன்றுமில்லை

முழுப்பொருள்
தக்கார் என்றால் பெரியோர் சான்றோர் என்று மட்டும் அல்லாது நடுவுநிலைமையுடையோர் என்ற பொருளும் அடங்கும். ஆதலால் (ஒரு அரசர்) ஒருவர் நடுவுநிலைமையுடையோரான சான்றோர்களுடன் ஒழுகி உறவு வளர்த்து அவர்கள் அறிவுரைகளை ஏற்று நடக்கக்கூடிய திறமையுள்ளவனை பகைவர்கள் ஒன்றும் செய்ய இயலாது. சான்றோர்கள் நாம் தவறு செய்தால் நம்மை திருத்தி நல்வழிப்படுத்துவர். நம்மில் பகை வளராது நம்மை காக்கப்பர்.

உதாரணமாக மஹாபாரதத்தில் துரியோதனனிடம் பீஷ்மர் போன்ற பிதாமகர் இருந்தும் துரியோதனன் பலர் அறிவுரைகளை கேட்கவே இல்லை. தன் சித்தத்திற்கு வேண்டியதை தவிர பிறர் சொல்லும் நல்லதை கேட்கும் திறனற்றவனாக இருந்தான். அதனால் தான் பகையை வளர்த்துக்கொண்டு அழிந்தான். ஆனால் பாண்டவர்கள் அறத்தில் சான்றோர் சொன்னவற்றை மதித்தார்கள். பாண்டவர்களுக்குள் உள்ளே தருமன் / யுதிஷ்ட்ரன் சொன்னவற்றை மற்ற நால்வரும் (பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்) என்றும் மதித்து நடந்தனர். தருமன் பகை வளராது பாதுகாத்தார்.

நாலடியார் பாடல் ஒன்று,
புன்செய் நிலத்திலும், நன்செய் நிலத்திலும் மரக்கட்டையைச் சார்ந்து முளைத்திருக்கும் புல்லானது, உழவர்களின் கலப்பைக்குச் சிறிதும் அசையாது. அதுபோல, வலிமை அற்றவராயினும் வலிமை மிக்காரைச் சார்ந்திருப்பாராயின், பகைவர் சினம் அவர்மேல் செல்லாது என்கிறது. அப்பாடல் கீழே:
கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
செல்லாவாம் செற்றார்சினம். (நாலடி 178)

ஆத்திச்சூடி சொல்வதும், “சான்றோர் இனத்திரு” என்பதுதான். பகையென்பது புறப்பகை மட்டுமல்லாது, உடனிருந்து அழிக்கும் அகப்பகையும் என்பது பெறப்படும்.

”....... தோள்வலி தாங்கினராயினும்
அமைச்சர் சொல்வழியாற்றுதல் ஆற்றலே” (கம்ப.மந்தரை.15)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.
(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்¢த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.).

மணக்குடவர் உரை
தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.

இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.

மு.வரதராசனார் உரை
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

No comments:

Post a Comment