இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

குறள் 903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
இல்லாள் - மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தாழ்ந்த  - தாழ்ந்துபோதல் - ஒப்புமையில்குறைந்துபோதல்; இழிந்தநிலையடைதல்; தாழ்ந்துகொடுத்தல்

தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல்.

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்

நல்லாருள் - நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர்

நாணுத்  - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள் 
தாழ்தல் என்ற சொல்லுக்கு அமிழ்ந்துதல் குறைதல் என்ற பொருள்கள் மட்டும் இல்லை. தங்குதல், விரும்புதல், ஆசைப்பெருக்கம், வணங்குதல் ஆகிய பொருள்களும் உண்டு. அதுமட்டுமின்றி  "இல்லாளிடம் தாழ்ந்து இருக்கும்" என்று கூறவில்லை. "இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு" என்று கூறப்படுகிறது. அதுவும் இன்மை என்னும் வறுமை என்று கூறப்படுகிறது.

ஆதலால் இக்குறளுக்கு பொருள் இப்படி இருக்கவேண்டும். மனைவியிடம் மோகத்தில் ஆசையில் திளைத்து அவளின்கண் விழுந்துகிடந்து வீட்டிற்குள்ளேயே தங்கி "அறம், பொருள், இன்பம், வீடு" என்பனவற்றுள் தன்னுடைய "அறம்" ஆகிய கடமைகளை  தருமங்களை செய்யாது இருக்கும் இயல்பு வறுமை என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய இயல்பு எந்நாளும் நல்லோர்களால் சான்றோர்களால் பெரியோர்களால் கற்றோர்களால் ஏன் மகளீரால் கூட விரும்பப்பட மாட்டாது. மேற்சொன்ன நல்லோர் முன் வெட்கி தலைக்குனிந்து இருக்க நேரும்.

மற்ற உரைகள் கூறுவது போல மனைவியிடம் அடிபணிவது அழகல்ல வெட்கப்படவேண்டியது. ஆனால் அதற்கு முன் தலைவன் தன் கடமைகளை சரியாக ஆற்றவேண்டும். அப்படி ஆற்றவில்லையென்றால் வீட்டில் மதிப்பு கிடைக்காது. அங்கே மனைவியிடம் தாழ்ந்துப்போகவே நேரும். அது நல்லோர் முன் வெட்கி நிற்கச்செய்யும். மேலும் நாம் நம் கடமையை சரியாக செய்தால் யாரிடமும் தாழ்ந்துபோக வேண்டிய அவசியம் இல்லை.

இங்கு ஔவையார் பாடல் வரிகளை நினைவு கூறுதல் நன்று. “எதிரில் பேசு மனையாளில் பேய் நன்று” என்று கூறிய ஔவையார் மேலும் சொல்லுவது இதோ.

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.).

மணக்குடவர் உரை
மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.

மு.வரதராசனார் உரை
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment