மனம்மாணா உட்பகை தோன்றின்

குறள் 884
மனம்மாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்
[பொருட்பால், நட்பியல், உட்பகை]

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

மாணா - மாட்சியற்று, பகை

உட்பகை - நட்புப்பாராட்டிக்கெடுக்கும்பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு.

தோன்றின் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

மாணா - மாட்சியற்று, பகை

ஏதம் - துன்பம், குற்றம், கேடு

பலவும் - பல -  pala   pron. cf. bahula. [K. hala, M.pala.] Many, several, diverse; ஒன்றுக்கு மேற்பட்டவை.-

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
உட்பகை என்பது புறத்தால் நண்பர்போல காட்டிக்கொண்டு அகத்தால் பகைகொள்வது. அது மாட்சியற்றதாகும். அத்தகைய உட்பகை ஒருவருக்குள்  (அரசருக்குள்) தோன்றுமாயின் அது தனக்கு மட்டும் துன்பம் தராது, தன்னுடைய சுற்றத்தாருக்கும் (அமைச்சர்களுக்கும்) மாட்சியற்ற துன்பங்கள் பலவற்றை தரும் கேடுகளை விளைவிக்கும்.

பகை என்பது துன்பம் தரும் ஒன்று தான். அது எல்லோரும் அறிந்ததே. ஆனால் உட்பகை என்பது மாட்சியற்றது. அது மிகவும் கேவலம் என்பதை நாம் இங்கு உணரலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தமரல் லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பலர்க் காகாதே தோன்றும்
சுவர்நிலம் செய்தமைத்துக் கூட்டியக் கண்ணும்
உவர்நிலம் உட்கொதிக்கு மாறு” (பழமொழி 144)

பரிமேலழகர் உரை
மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.).

மணக்குடவர் உரை
மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின் தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம். இஃது இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

No comments:

Post a Comment