ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை

குறள் 792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
ஆய்ந்து - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

ஆய்ந்து - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

கொள்ளாதான் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

கடைமுறை - கடைசிமுறை; முடிவு; இழிநிலை.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

சாம் - சா - சாதல் - இறத்தல்

துயரம் - துன்பம்; மனத்துக்கம்; இரக்கம்; மழை

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
நாம் நமது தாய் தந்தையரை தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் அவர்கள் நம் வாழ்வில் பல ஆண்டுகாலம் நம்முடன் வருவர். ஆனால் நமது மற்ற உறவுகளை நட்புகளை தேர்ந்தெடுக்க முடியும். அதனுடைய பொறுப்பு நம்மிடமே இருக்கிறது. ஏனெனில் ஒரு நல்ல நட்பு நம்முடன் பல ஆண்டு காலம் உடன் வந்தால் அது நம் வாழ்வில் ஆக்கப்பூர்வமாக வழிநடத்தும். அதுவே தீய நட்பாக இருந்தால் சிறிது காலமே ஆனாலும் பல ஆண்டுகளுக்கு நம்மில் தவறான ஆதிக்கத்தை செலுத்தி நம் வாழ்வை கெடுத்துவிடும். நமது சூழ்நிலைகளுக்கும் நமது செயல்களுக்கும் நாம் நடந்துக்கொள்ளும் விதத்திற்கும் நெருங்கியத்தொடர்பு உண்டு.

ஆதலால் நமது நட்பை, நமது அருகில் உள்ளவர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆராய்ந்து ஆராய்ந்து (சோதனை செய்து, நுணுகி நுணுகி) நமது நட்புகளை நம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவருடைய பண்பு நலன்களையும், செயல்முறைகளையும் பலவாராக, பலநேரங்களில் நோக்கி, நன்கு ஆராய்ந்து, அவரைப் பற்றி தெளிந்தபின்னரே நட்பென்று கொள்ளாதானுடை நட்பு.

அப்படி ஆராயாமல் தீய நட்புகள் வைத்துக்கொண்டால் நமக்கு இழிநிலை மட்டும் தராது நமக்கு இறப்பதற்கு சமமான துன்பத்தையும் மனதுக்கத்தையும் தரும். 

மேலும்:
பழமொழிப்பாடலொன்று ஆராயாமல் கொண்ட நட்பைப் பற்றி, இவ்வாறு கூறுகிறது. அன்புடையாராகவே இருப்பினும், ஆராயாமல் ஒருவரோடு கொண்ட நட்பு, இழிவைத்தந்துவிடும் என்று. அப்பாடல் வரிகள்:

“அளிந்தார்க்கண் ஆயினும் ஆராயானாகித் 
தெளிந்தான் விளிந்து விடும்”  (பழமொழி 42)

ஆராயாமல் நட்பு கொள்வதால் வரும் தீமையைப் பற்றி நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.

இது ஆராயாது நட்பு கொண்டவரை, முன்னிலையில் விளித்து, இவ்வாறு கூறுகிறது. “நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்!”

ஒரு நல்ல நட்பு அல்லது உறவுகள் 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும். ('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும். இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

No comments:

Post a Comment