அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

குறள் 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
அறம்  - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

சொல்லும்  - சுட்டிக்காட்டும் / எடுத்துக் காட்டும் / காட்டிக் கொடுத்து விடும்.

நெஞ்சத்தான் -  நெஞ்சம் (மனம்) உடையவனுக்கு

அன்மை  - aṉmai   s. (அல்) negation of a quality, அல்லாமை,  ; தீமை

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம்.

சொல்லும் -  சுட்டிக்காட்டும் / எடுத்துக் காட்டும் / காட்டிக் கொடுத்து விடும்.

புன்மையால் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

காணப்படும் - பிறர்க்குத் தெரியவருகிறது; உணரலாம்

முழுப்பொருள்
ஒருவன் அறத்தைப் பற்றி ஆயிரம் பேசலாம் அடுத்தவற்கு அறிவுரை சொல்லலாம் சொற்பொழிவு ஆற்றலாம். ஆனால் மனதினால் அறமல்லாது (அறத்திற்குத் தொடர்பல்லாது) தீயனவற்றை தீமையை கொண்டவனா என்பதை அறியவேண்டுமா ? அவன் புறத்திலேப் பேசும் சொற்களின்மூலம் அவனுடைய மனஇழிவை கண்டுக்கொள்ளலாம். 

எவ்வளவு அழகாக பேசினாலும் மனதில் இருந்து வரமால் அது வாயில் இருந்து வந்தால் அந்த சொற்களுக்கு மதிப்பு குறைவு தான். ஆதலால் ஒருவருக்கு மனத்தூய்மை இல்லை என்பதை அவர் புறம் பேசுவதில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு சமூகம் அறிவைவிட ஒழுக்கத்தை அதிகம் மதிக்கும். புறம் கூறுவது ஒழுக்கமற்றதாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும். இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது

மு.வரதராசனார் உரை
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

No comments:

Post a Comment