எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

குறள் 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

இறத்தல் -  கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

இறப்பான்  - உயிர் நீப்பான்

எய்தும் - நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும்

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

விளித்தல் - அழைத்தல்; சொல்லுதல்; பாடுதல்; அழித்தல்; கொல்லுதல்; பேராரவாரஞ்செய்தல்

விளியாது - அழியாது

நிற்கும் -  நிலைக்கும்

பழி  - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

முழுப்பொருள் 
நாம் கேட்கலாம், அறம் கற்க திருக்குறளைக் கற்க வந்தேன். நான் ஏன் அறம் அல்லாத பிறனில் விழையாமை பற்றி இவ்வளவு பயிலவேண்டும்? இராவணன் மிகப்பெரிய சிவபக்தன். சாமவேதத்தால் சிவபெருமானையே உலகிற்கு கொண்டுவந்தவன். அவனிடம் இந்த குற்றம் இருந்தது. அதனால் தான் இதனை அறிந்துணர்ந்து நடக்க வேண்டும். இத்தகைய குற்றம் இன்னாரிடம் தான் இருக்கும் இருக்காது என்று நம்புவதற்கில்லை. அறம் பற்றிய நல்ல எண்ணங்கள் உள்ளவன் மனதில் சில வேளைகளில் இத்தகைய குற்றங்கள் இருக்கும்.

ஏன் நீ மாற்றான் மனைவியை நோக்குகிறாய் என்று திருவள்ளுவர் கேட்கிறார் ஒருவனிடம் ? உனக்கென்று ஒரு பெண்ணை பார்த்துக்கொள்ளலாமே என்று கேட்கிறார்? அதற்கு அவன் பிறனில் விழைவது எளிது என்கிறான். ஏனெனில் நான் ஒரு பெண்ணைப்பார்த்து காதலித்து கல்யாணம் செய்து அவளை பாதுகாத்து அட்டிகை வாங்கிக்கொடுத்து என்று பல சிரமங்களை கொள்வதைவிட இது எளிது என்கிறான். அதே பிறனில் விழைய வேறொருவன் எல்லாவற்றையும் செய்திருப்பான் நாம் வெறுமென சென்று சுகத்தை அனுபவித்தால் போதும். உழுகிறவன் எல்லா வேலையும் செய்கிறான். நான் பழத்தை மட்டும் பறித்து சாப்பிடுகிறேன். திருவள்ளுவர் சொல்கிறார், அப்படி செய்யாதே, உன் குடிமுழுவதும் இந்த பாவம் நிற்கும் என்கிறார் திருவள்ளுவர். உனக்கும் மட்டும் பாவம் என்று நினைக்காதே உன் பரம்பரைக்கே இது பாவம். இந்த பழி உன் குடியிற்கு காலங்காலமாய் அழியாது நிற்கும் (உதாரணமாக இராவணனுக்கு இன்றும் இந்த பழி உள்ளது). ஆகவே இது எளிதாக இருக்கிறது என்பதற்காக செய்யாதே. 

பழி - இந்த உலகத்திலே பிறரால் தூற்றப்படுவது
பாவம் - அடுத்த பிறவியிலும் நம்மை வந்து துறத்துவது

மேலும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி”, “காணின் குடிப்பழியாம்”  என்று நாலடியார் கூறுகிறது.

வெற்றிவேற்கையில் அதிவீரராம பாண்டியர்,
தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி
பிறமனைக் கேகும் பேதையும் பதரே” என்பார்.

திருக்குறளைப் போலவே, பிறன் நயவாமையைப் பற்றி, நாலடியார் ஒரு பத்துப்பாடல்களைக் கொண்டுள்ளது. படிக்கவேண்டியவை.

இல்லிறப்பான் பழிகொள்வான் என்பதை பிணிவீட்டுப்படலத்தில் கம்பர் அனுமன் வாய்மொழியாக இராவணனுக்கு இவ்வாறு கூறுவார்
திறம் திறம்பிய காமச் செருக்கினால்மறந்து 
தத்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதேயலால் 
அறம்திறம்பினர் யாருளர் ஆயினார்?  
இச்சைத் தன்மையினிற் பிறரில்லினை 
நச்சி நாளும் நகையுற நாணிலன்”.

யுத்தமந்திரப்படலத்தில்
“ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து, 
அறிவமைந்தாய் தீவினை நயப்புறுதல் செய்தனை” 
என்று கும்பகருணனும் இராவணனை இடித்து உரைக்கின்றான்.

“தேவியை நயந்துசிறை வைத்தசெயல் 
நன்றோ பாவியர் உறும்பழி இதிற்பழியும் உண்டோ” 
என்று மேலும் அவனே கேட்கிறான்.

இராமாயணம் முழுவதுமே பிறன்மனை நயத்தலை இடித்துரைக்கும் செய்தி, பலரது வாயிலாக வாலிக்கும், இராவணனுக்கும், இன்றும் இருக்கும் வாலி, இராவண குணத்தர்களுக்கும் சொல்லப்படுகிறது.  நல்லதை விடுத்து அல்லதை எடுத்துக்கொண்டு, இராவணனைக் கொண்டாடுபவர்கள் இன்றும் இருக்கிறார்களே!

மேலும் : அசோக் உரை

ஒப்புமை
”வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர்பொருள் தாரம்என் றிவற்றை
நம்பினார்” (பெரியதிரு 1.6:4)

“காதலாள் கரிந்து நையக் கடியவே கனைந்து கன்றி
ஏதிலான் தாரம் நம்பி எளிதென” (சீவக 2769)

“காணில் குடிப் பழியாம்” (நாலடி 84)
“செய்தாயேனும் தீவினையோடும் பழியல்லால்
எய்தா தெய்தாது” (கம்ப.மாரீசன் 182)

“இச்சைத் தன்மையி னிற்பிற ரில்லினை
நச்சி நாளும் நகையுற நாணிலன்” (கம்ப.பிணிவீட்டு 99)

“ஆசில் பரதாரமவை யஞ்சிறை யடைப்பேம்
மாசில்புகழ் காதலுற வேம்வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானிடரை நன்றுநம கொற்றம்” (கம்ப.இராவணன் மந்திரப் 52)


பரிமேலழகர் உரை
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.).

மணக்குடவர் உரை
தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா மென்றது

மு.வரதராசனார் உரை
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

சாலமன் பாப்பையா உரை
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

No comments:

Post a Comment