கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

குறள் 1293
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
கெட்டார்க்கு - அழிந்தார், வறுமையடைந்தார், பாழானார்,

நட்டார் - நண்பர்; உறவினர்.

இல் - இல்லை

என்பதோ - என்பதோ

நெஞ்சே - நெஞ்சமே

நீ - நீ

பெட்டு - பொய்; மயக்குச்சொல்; சிறப்பு; மதிப்பு.

ஆங்கு  - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

செலல் - செல்லுகை.

முழுப்பொருள்
அழிந்துக்கொண்டிருப்போர்க்கு நண்பர்களும் உறவினர்களும் இல்லை என்பதை நீ அறிந்தாயோ நெஞ்சமே. அதனால் தான் என்னை பிரிவில் ஆழ்த்திவிட்டு சென்று அங்கு வருந்தி அழித்துக்கொண்டு இருக்கும் தலைவனை மதித்து அவர் பின்புச் செல்கிறாயே மனமே ? என்று தன் நெஞ்சை வினவுகிறாள் தலைவி.

தலைவிக்கு தலைவன் மேல் கோபம். இருந்தாலும் அவள் தலைவனையே நினைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் தன் நெஞ்சம்தான் அவரை நினைக்கிறது என்று பொய்யாக கூறிக்கொண்டு நெஞ்சத்திடம் புலம்புகிறாள். தான் எப்படி பிரிந்து வாடுகிறோமோ அதுப்போல் தலைவனும் பிரிவால் வாடுகிறான் என்று தலைவி நினைக்கிறாள்.

அகநானூற்று வரிகள் (71:1-3), 
“குறைந்தோர் 
பயனின்மையிற் பற்றுவிட் டொரூஉம் 
நயனின் மாக்கள் போல்” என்று கூறுவதும், 

வளையாபதி வரிகள், 
“விழுமிய ரேனும் வெறுக்க யுலந்தாற் 
பழுமரம் வீழ்ந்த பறவையிற் போல்” என்று கூறுவதும், கெட்டார்க்கு நண்பர்கள் இல்லை என்பதைதான்.

செல்வத்துட் சேந்தவர் வளனுண்டு மற்றவர்
ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் தொடர்பு” (கலித் 25:19-20)

(ஒப்புமை பார்க்க)

(ஒப்புமை பார்க்க)

(ஒப்புமை பார்க்க)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக. ('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?.

No comments:

Post a Comment