அன்பறிவு தேற்றம் அவாவின்மை

குறள் 513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]

பொருள்
அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

அறிவு - ஞானம்; புஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

தேற்றம் - தெளிவு; மனங்கலங்காமை; உறுதி; ஆறுதல்; செழிப்பு; சூளுறவு

அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இந் நான்கும் - இவை நான்கும்

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

உடையான்கட்டே - உள்ளவர் கண்ணே

தெளிவு - விளக்கம், துலக்கம்; உடற்செழிப்பு; பதநீர்; நினைவு; மனஅமைவு; அறிவு; நற்காட்சி; உளக்குறிப்பு; நீக்கம்; சான்று; ஆராய்வு; நம்பிக்கை; சாறு; கஞ்சித்தெளிவு; இலாபம்; பொருள்புலப்படஅமையும்செய்யுளின்குணம்; பாடற்பயன்வகை.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்ய எதுவெல்லாம் தேவை. அவை இருந்தால் என்ன பயன்? அதனைப்பற்றி இங்கே பார்ப்போம்
1. அன்பு - செயலை யாருக்காக செய்கிறோமோ அவர்கள்மேல் உண்மையான அன்பும் கருணையும் கண்ணோட்டமும் வேண்டும்
2. அறிவு - செயலை செய்வதற்குத் தேவையான அணைத்து ஆராய்ச்சியும் செய்து வாய்ப்புள்ள இடையூறுகளை அறிந்து அதற்கு திட்டமிட்டு நேரம் காலம் ஆகிவற்றை முடிவு செய்து செயலின் ஆதாயம் நஷ்டங்களை கணக்கிட்டு அச்செயலில் ஈடுபட வேண்டும். அதாவது அச்செயலை நன்கு ஆராய்ச்சிசெய்து எண்ணித் துணிய வேண்டும்.
3. தேற்றம் - செயலை செய்யும் பொது வரும் இடையூறுகளை சோம்பலை கண்டு சோர்வடையாது தன்மீதும் தன்செயலின்மீதும் ஐயம்கொள்ளாத உறுதியான கலங்காத மனம் வேண்டும்
4. அவாவின்மை - செயலினால் வரும் பயன் புகழ் விருது செல்வம் ஆகியவற்றின்மேல் விருப்பம் இல்லாத எண்ணம் வேண்டும்.

இவை நான்கும் ஒருங்கே ஒருவரிடம் அமைந்தால் அச்செயலை செய்ய தேவையான தெளிவு நம்பிக்கை இலாபம் ஆகியவை தானாக அமையும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அன்பு - அரசன் மாட்டு அன்பும், அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும், தேற்றம் - அவை செய்தற்கண் கலங்காமையும், அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய, இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
(இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும்ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவைமூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.

மு.வரதராசனார் உரை
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

சாலமன் பாப்பையா உரை
நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு

No comments:

Post a Comment