கேடும் பெருக்கமும் இல்லல்ல

குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கேடும்  - கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

பெருக்கமும் - பெருக்கம் - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

அல்ல - இல்லை, அன்று 

நெஞ்சத்துக் - நெஞ்சம் - நெஞ்சு; அன்பு, மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

கோடாமை - நடுவுநிலைமை

சான்றோர்க்கு - சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

முழுப்பொருள்
ஒவ்வொருவரின் வாழ்விலும் கேடு எனப்படும் துன்பங்களும் இழப்புகளும் பெருக்கம் எனப்படும் வளமும் மகிழ்ச்சியும் நிலையானது அல்ல. ஒவ்வொன்றும் இன்று வரும் நாளைப்போகும். அதனால் தான் அதனை நிலை இல்லாதது என்று கூறுகிறோம். அது நிலையாக இருக்கும் என்று எந்தவித உத்திரவாதமும் ஒருவரால் கொடுக்க முடியாது.

ஆனால் எத்தகைய காலத்திலும் மனநிலைக்கு ஏற்ப வெறுப்பாலோ கசப்பாலோ அலட்சியத்தாலோ சந்தோஷத்தினாலோ என்றும்  மனதால் கூட நடுவுநிலைமை தவறக்கூடாது. அவ்வாறு எக்காலத்திலும் நடுவுநிலைமை தவறாது இருத்தலே சான்றோருக்கு அழகாகும். 

ஒருவர் நடுநிலை பிறழாமல் செயல்புரிந்தவர் என்றால், அவர் தெய்வநிலை உணர்ந்தவராக இருப்பார்; அறநெறி பிறழாதவராக இருப்பார். அத்தகையவர்தான் விருப்பு வெறுப்பு அற்றவராக எச்செயலிலும் மனம் சமநிலையில் இருப்பவர்; அத்தகையவரின் செயல்களின் விளைவுகள் நீண்ட காலம் சமுதாயத்தில், மக்களுக்கு நலமளிப்பதாகவும் வழிகாட்டியாகவும் அமையும்

கம்பனும் ஆக்கமும் கேடும் தாம்செய் அறத்தொடு என்று கூறுகிறான் (“ஆக்கமும் கேடும் தாம்செய் அறத்தொடு பாவமாய நோக்கி வேறு உண்மை தேறார்”). “கோடாமை சான்றோர்க்கணி” என்பதை இதே அதிகாரத்தின் எட்டாவது குறளிலும் வள்ளுவர் சொல்லுவார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
குறள் 118

பரிமேலழகர் உரை
கேடும் பெருக்கமும் இல் அல்ல - தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.).

மணக்குடவர் உரை
கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

மு.வரதராசனார் உரை
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நன்மை-தீமை கருதாது நடுநிலை காக்கவும்.


English Meaning - As I taught a kid - Rajesh
Ups and downs are inevitable in life. Things may come and things may go. There is no guarantee. Our life and the states in our life are also volatile. However, in all times, without any prejudice or bias or carelessness, one has to practice neutrality right from their heart. A noble person is embellished when he practices neutrality all the time. 

Questions that I ask to the kid
Ups and downs are inevitable in life. What should we practice at all times?
What should we practice even during ups and downs in life?

No comments:

Post a Comment