தினைத்துணை நன்றி செயினும்

குறள் 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; காண்க:சாமை; தினையளவு.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

பனைத் - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை.

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

துணையாக் - அளவாக

கொள்வர் -  கருதுவார்கள்

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

தெரிவு - அறிவு; தெரிந்தெடுக்கை; தெரிந்தெடுக்கப்பட்டது; தோற்றம்; அறியப்பட்டது.

தெரிவார் - அறிந்தவர்கள்

முழுப்பொருள்
தினை அளவு மிக சிறிய உதவியானாலும் அதனை பனைமரத்தின் உயரம் போன்று மிக பெரிய அளவு உதவியாக கருதுபவர்கள் அவ்வுதவியை பெற்று பயனுற்று அதனை அறிந்தவர்கள் ஆவார்கள்.  

உதவியை பெற்றவர்கள் உதவியில் சிறு உதவி பெரு உதவி என்று பாராமல் சிறு உதவியானாலும் அதனை பெரிய உதவியாக போற்றுவார்கள். அதுவே அவர்களுக்கு சிறப்பு.

அதுவும் கூட அவ்வுதவியின் பயனறிந்தவரே அதை உயர்வாகக் கருதுவர். பயனறியா மூடருக்கு மலையளவு உதவி, உற்ற நேரத்தில் செய்தாலும் அதன் உயர்வு புரியாது.

ஒப்புமை
நாலடியாரும் இக்குறளின் கருத்தை ஒட்டியே, “தினையனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால் பனயனைத்தா உள்ளுவர் சான்றோர்” (நாலடியார் 344).

”தினைத்துணையும் நன்றி புரிகல்லா” - நாலடியார் 323
”தினைத்துணைய ராகித்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்” - நாலடியார் 104
“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்” (திருவள்ளுவர் 5)
”தினைத்தனை உள்ளதோர் பூவினிற்றேன்” (திருவாசகம், கோத்தும்பி 3)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.).

மணக்குடவர் உரை
தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

சாலமன் பாப்பையா உரை
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பயனடைந்தோருக்குச் சிறிய உதவியும் மிகப் பெரிதே.

English Meaning - As I taught a kid - Rajesh
Someone may have done a small kind deed/help or pass us information about something that has changed your life or helped in your life. So, you should think that small help thing as something big

Questions that I ask to the kid
If some does a small help, how would you consider it?
What is considered as a big help?

No comments:

Post a Comment