இரக்க இரத்தக்கார்க் காணின்

குறள் 1051
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரக்கம் - irakkam   erakkam எரக்கம் mercy, pity, sympathy  ; irakkam   s. (இரங்கு) mercy, compassion, கிருபை; 2. pity, sympathy, உருக்கம்; 3. distress, grief, துக்கம்.

இரக்க - கேள்

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரத்தக்கார்க் - வேண்டுபவர்

காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கரப்பின் - கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

தம் - தன்னுடைய

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
நமக்கு ஒரு நிலையில் (நமக்காகவோ அல்லது ஒரு பொது சேவைக்காகவோ) பொருளோ அல்லது உதவியோ தேவை படுகின்றது என்றால் அதனை யாரிடம் கேட்க வேண்டும்? யாரிடம் கேட்டால் அவர்கள் இவருக்கு உதவவேண்டும் என்று மனதார நினைப்பார்களோ அவர்களிடம் கேட்க வேண்டும்? அவ்வாறு கேட்டால் உதவுபவரிடம் உதவியை நாட வேண்டும். அவ்வாறு கேட்டு அவர் கொடுக்கவில்லை என்றால் அல்லது ஒழிந்துகொண்டால் அல்லது வைத்துக்கொண்டே இல்லை என்று வஞ்சம் செய்தால் அது தவறு/குற்றமும் ஆகும். இதனால் நாம் கேட்டது தவறாகாது. இயன்றும் கொடுக்காததே தவறாகும்.

ஒப்புமை
“தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க் 
குற்ற குறையை உரைப்ப” (பழமொழி 88)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். ('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும்,ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது. இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

சாலமன் பாப்பையா உரை
ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

No comments:

Post a Comment