கைவேல் களிற்றொடு போக்கி

குறள் 774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
வேல் - நுனிக் கூர்மையுடைய ஆயுத வகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்

கைவேல் - கைவிடாவேல்; கப்பணம்; A hand-lance, a dart, dirk, javelin. ஆனை நெருஞ்சி முள்போல இரும்பால் பண்ணிய கருவி ;

களிறு  - ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள்.

களிற்றொடு - யானையுடன்  நேருக்கு நேராக

போக்கி - போக்குதல் - போகச்செய்தல்; செய்தல்; செய்துமுடித்தல்; கொடுத்தல்; உணர்த்தல்; உட்புகுத்துதல்; மெலிவுறச்செய்தல்; இல்லாமற்செய்தல்; கழித்தல்; அழித்தல்.

வருபவன் - வென்று வருகின்றவன்

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

மெய்வேல் - உடலில் பட்ட அம்பு

பறி - பிடுங்குகை; கொள்ளை; இறக்கினபாரம்; மீன்பிடிக்குங்கருவி; பனையோலைப்பாய்; உடம்பு; பொன்

பறி-தல் - paṟi-   4 v. intr. 1. To slip out,run away, as a horse; to flow out quickly, aswater; ஓடிப்போதல். பண்டை வினைகள் பறியநின்ற (தேவா. 395, 2). 2. [K. paṟi.] To bedisplaced suddenly; to be capsized; to giveway; to be tilted; to be uprooted; நிலைபெயர்தல்.(W.) 3. To escape, as breath in sighing,as air from a bottle; to fly off, as steam, asheat from the system; வெளிப்படுதல். மூச்சுப்பறிகிறது. 4. To be discharged, as an arrow;
பறி-தல்
paṟi-   4 v. tr. cf. பரி-. To pierce;to penetrate; ஊடுருவுதல். பட்டுப்பறியும் படைவேல் (சொக்க. உலா, 393).

பறியா  - ஓடிப்போகாமல்

நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

நகும் - நகு - v. n. To shine, glitter, coruscate, ஒளிவிட. 2. To laugh, to smile, to smile in approbation or delight of heart, புன்னகைகொள்ள. 3. To deride, to laugh at, to ridicule, இகழ. (சது.) 4. To bloom, as a flower, மலர. (p.) இலங்கையுங்குலுங்கநக்கான். He laughed un til the island of Lanka (Ceylon) shook.
நகல்--நகுதல், v. noun. Shining, deriding, smiling, &c.

முழுப்பொருள்
வீரன் என்பவன் தன் எதிரே யானை வந்தாலும் அதன் மேல் தன் கையில் உள்ள வேலினை எறிந்து அதன் உயிரை போக்கி அடுத்து ஒரு யானை தன்னை தாக்க வந்தாலும் (மன)சோர்வடையாது தன் மார்பின் (உடலின்) மேல் உள்ள அம்பினை பிடுங்கி அந்த யானையை தாக்க முற்படுவான். அந்த யானையுடன் போர் புரிவதை மகிழ்ச்சியுடன் செய்வான்.

ஏனெனில் அத்தகைய தருணத்திலும் விழிப்பாக இருந்துக்கொண்டு தொடர்ந்து எதிர்த்துப்போட்டியிட ஒரு ஆயுதம்/ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்ற என்ன ஓட்டமும் மனநிறைவும் அடைகிறான். அது அவனுடைய விரத்திறனையும் காண்பிக்கிறது. தடைக்கற்களை வெற்றிப்படிகற்களாய் மாற்றும் மன உந்துதலும் முனைப்பும் விழிப்பும் உள்ளது. 

தத்துவார்த்தமாக பார்த்தால் ஓவ்வொருவருக்கும் தன் உயிரே (வாழ்வே) போகும் நிலையிலும் தான் செய்கின்ற தொழிலை நேசித்து உண்மையாக செய்யும் பொழுது யானையே (மலையளவு சோதனைகள்) எதிரே வந்தாலும் அதனுடன் போட்டி போட்டு அதனை வெல்வர். அவ்வாறு போர் புரிவதை சோர்வடையாமல் மகிழ்ச்சியாக செய்வார்கள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”களிறெறிந்து முரிந்த கதுவாய் எஃகு” (பதிற்.45:4)
“பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேல்துரந் தினியே
தன்னும் துரக்குவன் போலும்” (புறநா.274:2-4)

“அகலத்து... அழுத்திய சக்தி வாங்கி..திருத்தி” (பெருங் 3,20:62-5)
“புண்ணிடங் கொண்ட எஃகம் பறித்தலின்” (சீவக.284)
”நெஞ்சகம் நுழைந்த வேலைப் பறித்து..
மிறைக்கொளி” (சீவக.2293)

“மொய்யகத்து மன்னர் முரண்இனி என்னாங்கொல்
கையகத்துக் கொண்டான் கழல்விடலை - வெய்ய
விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
படுசுடர் எஃகம் பறித்து” (பு.வெ.142)

பரிமேலழகர் உரை
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் - கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி; வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும். (களிற்றோடு போக்கல் - களிற்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. (பு.வெ.மா.தும்பை16).

மணக்குடவர் உரை
தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன் தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும். இது வீரர் செயல் இத்தன்மையாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும்என்றது.

மு.வரதராசனார் உரை
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

சாலமன் பாப்பையா உரை
தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

எழுத்தாளர் ஜெயமோகன்-இன் கட்டுரையில் (குறளைப் பொருள்கொள்ளுதல்…) இருந்து
மெய்வேல் பறியா நகும் என்பதை பறிக்காமல் என்று பொருள்கொண்டால் அவன் வேலை எறிந்துவிட்டு தன்மகிழ்வுடன் நின்றுகொண்டிருப்பதை காட்டும் கவிதை ஆகிறது. பறித்து என்றால் மேலும் போருக்குச் செல்பவனின் போர்ச்சிரிப்பாக ஆகிறது. அர்த்தம் உங்களுடையது.

சரி, நான் என்னபொருள் கொள்கிறேன்? பறித்து என்றுதான். வேலைக் கைவிடுவது போரில் செய்யக்கூடுவது அல்ல . அதற்கு இலக்கணம் உண்டா? ஆம். சும்மா கைபோன போக்கில் நினைவிலிருந்த சொல்லைத் தேடி எடுத்த உதாரணம்

ஐய உள்ளெழுந் தருளுக! வடிகணீ ர் அடியேன்
உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக்கு இசையச்
செய்ய வல்லன் என்று அஞ்சலி செய்ய, உள் நகையா
மைய நோக்கியை நோக்கி மீனோக்கி தன் மணாளன்.
[திருவிளையாடற் புராணம்]

என்னும் பாடலில்  “உள் நகையா மைய நோக்கியை நோக்கி” என வரும் வரியைப் பாருங்கள். நகையா என்ற சொல் நகைத்து என்றே இங்கே பொருள்படுகிறது. [மீனோக்கி மீனாட்சிக்கு அருமையான தமிழ்வடிவம்]. சங்கப்பாடல்களில் நகையா, நில்லா என்னும் சொல்லாட்சிகள் நகைத்து,நின்று என்னும் பொருளில் பல இடங்களில் வருகின்றன. அது அக்காலத்தைய ஒரு மொழியாட்சி.

2 comments:

  1. கையில் இருந்த வேலை களிற்றின்மேல் எறிந்து அதைக் கொன்றபின் முன்னோக்கி நகர்பவன் மேல் இன்னொரு வேல் பாய்கையில் அதைப் பறியாமல் புன்னகைப்பான் வீரன்! ஏனெனில் இன்னொரு யானை வரின் அதை எதிர்கொள்ளும் போது பறித்து எரிய வேல் கிடைத்து விட்டதே என்ற மன நிறைவே அதன் காரணம்!

    பறியா எனபதை எதிர்மறை வினையெச்சமாகப் பொருள் கொண்டால், பறித்துச் சிரித்தான் எனலாம்! ஆனால், அவன் உடனே இறக்கக் கூட நேரிடலாம். அதனால் பறியாமலேயே சிரித்தான் என நேர்ப் பொருள் கொள்வது தவறில்லை!

    ReplyDelete
  2. " ஏனெனில் இன்னொரு யானை வரின் அதை எதிர்கொள்ளும் போது பறித்து எரிய வேல் கிடைத்து விட்டதே என்ற மன நிறைவே அதன் காரணம்!"
    அத்தகைய தருணத்திலும் ஒரு ஆயுதம்/ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்ற என்ன ஓட்டமும் மனநிறைவும் அடைகிறான் அது அவனுடைய விரத்திறனையும் காண்பிக்கிறது என்பது நன்றாக உள்ளது.

    ReplyDelete