அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை

குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.

வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

ஐந்தன் - ஐந்து
புலத்தை - புலன்கள் - ஐம்புலன் நுகர்ச்சி யாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவை; பொறி; கருமேந்திரியம்; அறிவுடைமை; அறிவுக்கூர்மை; வெளிப்படக்காண்டல்; உறுப்பு; வயல்; நூல்வனப்புள்ஒன்று.

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்.


வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

வேண்டிய - vēṇṭiya   adj. id. 1. Indispensable; இன்றியமையாத. 2. Required; தேவையான. 3. Sufficient; போதுமான. 4. Many;மிகுதியான. வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ(தாயு. மண்டலத். 10)

எல்லாம் - முழுதும்

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு.

முழுப்பொருள்
அடல் என்றால் வலிமை, வெற்றி என்ற பொருளிலே இங்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் ஒருவருக்கு வலிமை வேண்டும் என்றால் அவர் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும், நாம் ஆசைப்படுகின்ற எல்லாவற்றையும் ஒருசேர விட்டொழிய வேண்டும். அவ்வாறு செய்தால் அது நமக்கு வலிமையே. முன்பு குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் சொன்னதுப்போல வேண்டாம் என்று விடுவதனால் நமக்கு இன்பமே. அதுப்போலவே இக்குறளில் சொல்லப்படுவது என்னவென்றால் விட்டொழிவதனால் வலிமை நமக்கு என்கிறார் திருவள்ளுவர். வலிமை வேண்டும் என்றால் வலிமைக்கு தடைகற்களாய் இருக்கின்ற அனைத்தையும் (ஐம்புலன்கள், ஆசைகள்) ஒருசேர விட்டொழிய வேண்டும். 

ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் கருவி என்றால் அது நமது மனசாகும். உதாரணமாக, ஒருவருக்கு கண்ணைத் திறந்துக்கொண்டே தூங்கும் பொழுது  (அது உண்மையில் ஒரு நோயும் குட) அவர் எதையும் பார்ப்பது இல்லை. ஏனெனில் அவர் மனசு தான் பார்க்கிறது (அறிவியலாக பார்த்தால் ஒருவர் தூங்கும் பொழுது கண்ணுக்கும் மூலைக்கும் உள்ள ஒரு நரம்பு செயலில் இருக்காது). ஆதலால் வலிமை வேண்டும் என்றால் ஐம்புலன் நுகர்ச்சி யாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவற்றை அடக்க வேண்டும். அதனால் வரும் ஆசைகள் அனைத்தையும் விட்டொழிய வேண்டும். 

பரிமேலழகர் உரை “வீடு எய்துவாருக்கு”என்கிறது. மறுப்பதற்கு இல்லையென்றாலும், அவர் கீழ்காணும் நாலடியாரின் பாடலையொட்டி பொருள் செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. அப்பாடலானது:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும். (நாலடி 59)

“கசட்டுறு வினைத்தொழிற் கள்வ ராயுழல்
அசட்டர்கள் ஐவரை அறுவ ராக்கிய
வசிட்டன்” (கம்ப.திருவவதார.77)

“ஐந்தொ டாகிய முப்பகை மருங்கற அகற்றி
உய்ந்து போயினர்” (கம்ப.மந்திர 64_

“மிடலுறு புலன்கள் வென்ற மெய்த்தவர்”
“அடக்கிஐம் புலன்கள் வென்ற தவப்பயன்’ (கம்ப.கடல்தாவு.11,29)

“வீடுமின் முற்றவும்” (திருவாய் 1.2:1)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.

மு.வரதராசனார் உரை
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.

No comments:

Post a Comment