உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

குறள் 160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]

பொருள்
பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.
உண்ணாது - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்;

நோற்பார் - ōṟpār   n. நோல்-. Ascetics,those who practise religious austerities; தவஞ்செய்வார். நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள்,48).

பெரியர் - periyar   n. பெரு-மை. See பெரியார். சான்றோர் பெரியராக் கொள்வது கோள் (நாலடி,165).

பிறர் - piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர். பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் (குறள்,319).

சொல்லும் -சொல்கின்ற

இன்னாச் - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

நோற்பாரின் - ōṟpār   n. நோல்-. Ascetics,those who practise religious austerities; தவஞ்செய்வார். நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள்,48).

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

முழுப்பொருள்
உணவு உண்ணாமல், எதனையும் நுகராமல் புலன்களை அடக்கி நோன்பு இருந்து தவம் செய்வோரை பெரியவர்கள் என்கிறோம். இவர்களை மதிக்கிறோம். ஆனால் மதிதனை அடக்குவது அதனினும் சிறந்தது. ஆதலால் தான் பிறமனிதர்கள் நம்மை பார்த்துச்சொல்லும் கடும் சொற்களுக்கு, தீயசொற்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் கோபம் கொள்ளாமல் பொறுத்துக்கொள்ளுவதை ஒரு நோன்பாக பின்பற்றுவோரை உணவு உண்ணாமல் தவம் செய்யும் பெரியோரை விட ஒரு படி மேல் என்கிறார் திருவள்ளுவர். (’பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று இதனால் தான் சொன்னார்களோ).

ஒப்புமை
”அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்” (கலி 133.10)

“தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க” (பழ 135)

அறநெறிச்சாரப் (100) பாடலில் முனைப்பாடியார் கூறுவதைப் பார்ப்போம்.  எளிய, இலகுவான தமிழிலே, படிக்கும்போதே பொருள் விளங்கும் பாடல்.
“எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் – மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டா தவம்”

மேலும்: அஷோக் உரை

புலன்களையே வென்று நிற்கும் துறவியரை
பொறுப்பான நல் மனிதர் தமக்குப் பின்னே
உளர் என்று வள்ளுவரும் சொல்லுகின்றார்
உலகுக்கு வழிகாட்டும் பொதுமறையில்
வளர்கின்ற பசிதன்னைப் பொறுத்து வெல்லும்
வடிவான துறவியரை விடவும் மற்றோர்
தளர்வானின் பசி தன்னைத் தீர்த்து வைக்கும்
தனி மனிதர் மிக உயர்ந்தார் என்றே சொன்னார்

உண்ணாமல் அதே நோன்பாய்க் கொண்டுயரும்
உயர் துறவிக் கூட்டத்தைக் கண்டு சொன்னார்
எண்ணுதற்கு உயர்ந்தாற்போல் தோன்றும் இவர்
எதிரிகளின் பண்பற்ற சொற்கள் தன்னை
இன்னாதாய்க் கொள்ளாமல் முக மலர்ந்து
ஏற்று அதன் பின்னாலும் நன்மை செய்யும்
நல்லாராம் அவர் பின்னால் ஆமாம் ஆமாம்
நாட்டாரே உதவி செய்யும் உயர்வீர் என்றார்

தவநெறியாய் வாழுகின்றார் தம்மைவிடத்
தனி மனிதன் உயர்ந்தவனாய் நிற்பான் என்று
புவனம் எல்லாம் வாழ்வதற்கு வழிகள் சொன்ன
பொது மறையில் வள்ளுவனார் சொல்லுகின்றார்
அவர் உடம்பை வருத்தி உண்ணா நோன்பதனை
அடிக்கடியே மேற் கொள்ளும் அவரை விட
பிறர் சொல்லும் இனிமையற்ற சொற்கள் தன்னை
பெரிதாக்கார் தன் பின்தான் துறவி யென்றார்

பசி தாங்கி பல விதத்தில் தவங்கள் செய்யும்
பரம் தேடி நின்றிருக்கும் தவ நெறியார்
கசிகின்ற காதலிலே கடவுளையே
காலமெல்லாம் நினைக்கின்ற மிகப் பெரியார்
பசி தீர்த்து மற்றவரின் துன்பம் தீர்த்து
பண்பதுவே பசி தீர்த்தல் என்று வாழும்
இசை வாழ்வாய் தன் வாழ்வை மாற்றிக் கொண்ட
எளியார் பின் துறவியரை வைப்பேன் என்றார்

பரிமேலழகர் உரை
உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின் (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின், இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.

மு.வரதராசனார் உரை
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

No comments:

Post a Comment