விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

குறள் 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 
தீமை புரிந்துதொழுகு வார்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]
 
பொருள்
விளிந்தாரின் - விளிந்தார் - viḷintār   n. விளி¹-. Thedead; இறந்தவர். விளிந்தாரின் வேறல்லர் (குறள்,143).

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

அல்லர் - இல்லை

மன்ற - maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக

தெளிதல் - தெளிவாதல்; அமைதியுறுதல்; ஒளிர்தல்; வெண்மையாதல்; குணப்படுதல்; செழித்தல்; ஒழிதல்; துளைத்தல்; அறிதல்; முடிவுக்குவருதல்; ஆராய்தல்; தேறுதல்; நம்புதல்; இலாபம்காணுதல்.

தெளிந்தார் - சந்தேகங்கள் நீங்கி தெளிந்தவர்கள்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

தீமை - tīmai   n. தீ&sup4;. [M. tī.] 1. Mischief; சேட்டை நிச்சலுந் தீமைகள் செய்வாய்(திவ். பெரியாழ். 2, 7, 3). 2. Fault, guilt; குற்றம் பெரியார்கட் டீமை கருநரைமேற் சூடேபோற் றோன்றும் (நாலடி, 186). 3. Cruelty, injury; கொடுமை நீ மெய்கண்ட தீமை காணின் (புறநா. 10). 4. Sinfuldeed; பாவச்செயல். தீமை புரிந்தொழுகுவார் (குறள்,143). 5. Inauspicious occasions, as of death;அசுபம். அவன் நன்மை தீமைகளுக்கு வருகிறதில்லை.

புரிந்து - விரும்புதல்; தியானித்தல்; செய்தல்; படைத்தல்; ஈனுதல்; கொடுத்தல்; நுகர்தல்; உற்றுப்பார்த்தல்; விசாரணைசெய்தல்; சொல்லுதல்; நடத்துதல்; மேற்கொள்ளுதல்; முறுக்குக்கொள்ளுதல்; திரும்புதல்; மிகுதல்; அசைதல்; விளங்குதல்; பொருள்விளங்குதல்.

ஒழுகுவார் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

முழுப்பொருள்
ஒருவர் பல நூல்களை கற்றுத் தெளிந்து தேர்ந்து இருக்கலாம். ஆனால் அதன்படி (அறம் படி) வாழ்வில் ஒழுகினால் தான் கற்றதற்கு பயன். அப்படி ஒழுகாவிட்டால் பயனில்லை.

ஆதலால் எல்லா நூல்களை கற்றும் (கற்காவிட்டாலும்) பிறர் மனைவி மீது மோகம் கொள்வதோ, விழைவதோ, உறவு வைத்துக்கொள்வதோ தீமையே ஆகும். இது தீமை என்று புரிந்தும் (அறிந்தும்) அதனை ஒழுகுதல் மிக மிக தவறாகும். ஆதலால் தான் எத்தனை நூல் கற்று தெளிந்து இருந்தாலும் அவர் இறந்தவருக்கு சமம். ஒழுக்கம் இல்லை என்றால் அறிவிருந்தும் இவர்கள் பிணங்கள் என்கிறார் திருவள்ளுவர்.

பி.கு: ஏன் திருவள்ளுவர் விளிந்தார் (இறந்தவர்) என்று சொல்ல வேண்டும்? மடையர், அரக்கன் என்றுக்கூட சொல்லி இருக்கலாம். யோசித்துப்பார்த்தால் எனக்கு கிடைத்த விடை இதொ. ஒருவர் கற்றால் அவை யாவும் மூளையில் சென்று பதிவாகி விடுகின்றன. இவையாவும் நம் உடம்பில் தான் இருக்கின்றன. இறந்த பிறகும் இம்மூளை உடம்பில் தான் இருக்கிறது. கற்ற பதிவுகளும் மூளைக்குள்ளேயே தான் இருகின்றன. ஆனால் உடம்பு அழிகிறது. மூளையும் அழிகிறது. இப்பதிவுகளுக்கு இப்பொழுது ஒருபயனும் இல்லாமல் போகின்றது. இவ்வுடம்பில் நிறைய அறிவு இருக்கிறது என்று யாரும் விலை கொடுத்து வாங்கி உண்ணப்போவது இல்லை. .... ஆனால் உயிருடன் இருக்கும் பொழுது நாம் கற்றவற்றை பின்பற்றினால் அதற்கு மெய்ப்பொருள் கிடைக்கும், பலன் கிடைக்கும். அதனை பின்பற்றவில்லை என்றால் பிணத்திற்கும் நமக்கும் (அறிவை சுமக்கும் இவ்வுடம்பிற்கும்) வித்தியாசம் இல்லை.

பி.கு: இங்கே நான் பார்த்த ஒரு விஷயம் (ஒரு வேளை இப்படி பார்க்க கூடாமலும் இருக்கலாம். இருப்பினும் மையப்பொருள் ஒன்று தான். பிறர் மனைவியை விழைவது தீது) என்னவென்றால்?. ”தெளிந்தாரில் தீமை” என்ற சொற்தொடரை ‘தெளிந்தார்-இல் தீமை’ என்று பார்த்தால் தெளிந்தவர்களுள் தீமை (பிறர் மனை விழைவது) புரிகிறவர் என்று அர்த்தம். ‘தெளிந்தார் இல்-தீமை’ என்று பார்த்தால், தெளிந்தவர் இல்தீமை எனப்படும் இல்லற தீமையாக கருதப்படும் பிறன் மனை விழைவதை புரிகிறவர். 

ஒப்புமை
”செத்தாரின் வேறல்லர்” (குறள் 926)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர். இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.

மு.வரதராசனார் உரை
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.

No comments:

Post a Comment