பருகுவார் போலினும் பண்பிலார்

குறள் 811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பருகுதல் - குடித்தல்; உண்ணுதல்; நுகர்தல்.
போலினும் - தோன்றினும்
பருகுவார் போலினும்  - இன்பத்தைப் பருகுதல், நுகர்தல் போன்று இனிதாகத் தோன்றினும்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இலார் - இல்லாதவர்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

பெருகல் - மிகுதி
பெருகலின் - வளர்வதை விட
குன்றல் - குறைதல்; கெடுதல்விகாரம்.
இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
உடலுக்கு உபாதைகள் தரும் ஒரு உணவுப்பண்டம் உண்ண இனிமையாக இருந்தாலும் அவை நல்ல உணவு ஆகாது. அதுவும் அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லதும் அல்ல. உதாரணமாக இனிப்புகள், போதைப்பொருட்கள், கள் போன்ற போதை தரும் குடி வகைகள். இந்த உணவு வகைகள் உடலிற்கு ஆரோக்கியம் கூட்டும் குணங்கள் (பண்புகள்) அற்றவை. மாறாக உடலுக்கு காலப்போக்கில் நோயினை உண்டாக்கும்.

அதுப்போல பழகுவதற்கு இனிமையாக இருப்பினும் நல்ல பண்புகள், நல்ல குணங்கள், நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், இல்லாத ஒருவரிடம் உறவு/நட்புக்கொள்வது நல்லது அல்ல (ஏனெனில் அவன் நல்ல மனிதன் அல்ல). அத்தகைய நட்பை வளர்த்துக்கொள்ளமால் குறைத்துக்கொள்வதே சிறந்தது. அதுவே ஒருவருக்கு நன்மை பயக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பருகு வன்ன காதல்” (அகநா 305:6, 399:4)
“பருகு காதலிற் பாடி ஆடினார்” (சீவக 1765)

பரிமேலழகர் உரை
[இனிப்பொறுக்கப்பட்டாத குற்றம் உடைமையின் விடற்பாலதாய நட்பு , நட்பாராய்தற்கண் சுருங்கச் சொல்லிய துணையான் அடங்காமையின் ,அதனை இரு வகைப்படுத்து இரண்டு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் தீநட்புக் கூறுகின்றார்.அஃதாவது, தீக்குணத்தாரோடு உளதாய நட்பு, குணத்தின் தீமை ஒற்றுமை பற்றி உடையார் மேற்றாய், அது பின் அவரோடு செய்த நட்பின் மேற்றாயிற்று. அதிகாரமுறைமை கூறாமையே விளங்கும் .]

பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று. ('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78)என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.).

மணக்குடவர் உரை
கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று. இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

சாலமன் பாப்பையா உரை
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

English Meaning - As I taught a kid - Rajesh
It is best to minimize the intake of food which are good for you. Similarly it is not good to have friendship with someone who has bad qualities. It is best minimize that relationship

Even though a drink or food might be tasty to our tongue, if it is not healthy, it is better to avoid or minimize its consumption. Similarly, even if a relationship is giving some form of pleasure or good time or benefit, it is better to reduce the relationship rather than growing it. Because the losses are bigger than small insignificant gains. 

Questions that I ask to the kid
What is better to decrease than increasing? Why?
What kind of relationship is better to decrease than increasing? why?

No comments:

Post a Comment