பழைமை எனப்படுவது யாதெனின்

குறள் 801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் 
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பழைமை - தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு.

எனப்படுவது - என்பது; என்பதின் பொருள் யாதெனின்
யாது - எது, இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால்; eṉiṉ   conj. id. 1. If (it is)said so; என்று சொல்லின். 2. In consideration of; என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107).  

யாதும் - yātum   adv. யாது¹ + உம். Anything and everything; anything; எதுவும். யாதுமூரே யாவருங் கேளிர் (புறநா. 192).

கிழமையைக் - கிழமை - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை; மாட்சிமை; 

கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

கீழ்(ழு)-தல் - kīḻ-   4 v. cf. கீள்-. [K. kīḻ.] tr.1. To rend, tear; கிழித்தல் பழம் விழுந்து . . .பஃறாமரை கீழும் (திருக்கோ. 249). 2. To rive, split,cleave; பிளத்தல் உறுகால் வரைகீழ்ந்தென (சீவக.1157). 3. To destroy, demolish; சிதைத்தல் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (குறள், 801). 4. To dig;தோண்டுதல். வேரொடுங் கீழ்ந்து வௌவி (சீவக.2727). 5. To break, as a promise; to transgress, as a command; மீறுதல் தாய்வார்த்தை கீழாதவாண்மை (விநாயகபு. 21, 19).--intr. 1. To draw,as a line, a diagram; கோடுகிழித்தல். (W.) 2. Tobe uprooted, dislocated; பறியுண்ணுதல். மரங்கள்வேரொடுங் கீழ்ந்தென (சூளா. சீய. 144).

கீழ்ந்திடா - சிதையாமல்

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
பழைமை என்றால் நெடுநாள் நட்பாகும். ஆனால் வெறும் நெடுநாள் நட்பு நட்பாகாது. நாம் நட்புக்கொள்ளும் பொழுது ஆராய்ந்துக்கொள்ள வேண்டும். இத்தகைய நெடுங்கால பழக்கத்தில் தன் நண்பரின் கிழமை அதாவது மாட்சிமை குண்றினாலும் தன் நண்பர் குற்றமே செய்தாலும் அவருடன் நட்பினை துண்டித்துக்கொள்ளக் கூடாது. இதற்கு பொருள் தன் நண்பரின் குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அர்த்தம் ஆகாது. இதன் பொருள் தன் நண்பர் தவறு செய்ததினால் அவர் நண்பர் என்று ஆகாது என்பது ஆகாது என்பதே ஆகும்.

மகாபாரத கர்ணனை, அவ்வாறே எடுத்தாள்பவர்கள் சித்தரிக்கின்றனர். அவன் துரியோதனனோடு கொண்ட நீண்ட நட்பால், அந்நட்பின் பழைமை கருதி அவனோடு, அவன் செய்த தீச்செயல்களுக்கு உடன் பட்டதாக கூறுவர். வியாச பாரதத்தில் காட்டப்படும் கர்ணனுக்கு இவை சற்றும் பொருந்தாவிடினும், இக்குறளின் கருத்தை வலியுறுத்த அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , நட்டாரது பழையராந்தன்மை பற்றி அவர் பிழைத்தன பொறுத்தல் , காரணப் பெயர் காரியத்திற்கு ஆயிற்று , ஆராய்ந்து நட்கப்பட்டார் எனினும் பொறுக்கப் படும் குற்றமுடை யராகலானும் ஊழ்வகையானும் நட்டார் மாட்டுப் பிழையுளதாம் என்பது அறிவித்தற்கு , இது நட்பு ஆராய்தலின் பின் வைக்கப்பட்டது .]

பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது. 

மு.வரதராசனார் உரை
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

No comments:

Post a Comment