எள்ளின் இளிவாம்என்று எண்ணி

குறள் 1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
'எள்ளின் - எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

இளி- இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு

வாம் - தமக்கே

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு, பசு, எருமை கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

உள்ளும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உயிர்க் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
பிரிந்துச்சென்று உள்ள காதலர் மீது காதலிக்கு கோபம் உள்ளது. பிரிவு தரும் காமந்நோயை எனக்கு தந்த காதலனை நான் இகழலாம். ஆனால் அவரை ( பொதுவாக பிறரைக் கூட) இகழ்ந்துப் பேசுதல் இழிவான செயல் என்று நான் நினைப்பதால் அவரை நான் இகழவில்லை. மாறாக அவரின் சிறந்த பண்புகள், குணங்கள், மேன்மைகள் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து (உள்ளும்), ஆராய்ந்து கொண்டு இருக்கிறது எங்கள் உயிரோட்டமான காதலை அன்பினை கொண்ட என்னுடைய நெஞ்சம்.

காதலன் மேல் கொண்ட அன்பினால் காதலனை எந்த ஒரு காரணத்திற்காகவும் தவறாக நினைக்க கூடாது, எதிர்மரையான சிந்தனைகள் தன்னில் வேர் ஊன்ற விடக்கூடாது என்று காதலி நினைக்கிறாள். காதல் வளர்ந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். அதுவே காதலின் சிறப்பு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது. (எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு?. இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

No comments:

Post a Comment