உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

குறள் 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
உள்ளக் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

களித்தலும் - களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

உள்ளக்களிப்பு - மனமகிழ்ச்சி

காண - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

மகிழ்தலும் - மகிழ்தல் - அகங்களித்தல்; உணர்வழியஉவகைஎய்துதல்; குமிழியிடுதல்; விரும்புதல்; உண்ணுதல்.

கள்ளுக்கு - கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

இல் - இல்லை

காமத்திற்கு - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச் சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
என் காதலரை பற்றியும் எங்கள் காதலை பற்றியும், நாங்கள் புணர்ந்ததைப் (கலவிக் கொண்டது) பற்றியும், நான் நினைத்தால் என் உள்ளம் (மனம்) களிப்படைகிறது (உள்ளத்திற்கு ஊக்கம் என்ற பொருளும் உண்டு. ஆதலால் நான் இன்னும் பல நாள் என் காதலருடன் வாழ ஊக்கம் கொள்கிறேன்), என் காதலரை கண்டால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் (ஏனெனில் என் கவலைகள் யாவும் மறக்கிறேன். நாங்கள் கொள்ளப்போகும் புணர்ச்சியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்). ஆக காதலினால் நினைத்தாலும், கண்டாலும் காதலர்களுக்கு இன்பமே. இவர்கள் ஒருவரை ஒருவர் நுகரவோ, தீண்டவோ, தழுவவோ, புணரவோக் கூட தேவையில்லை. ஆனால் இன்பம் உண்டு. அதுவே இவர்கள் புணரும் பொழுதும் இன்பம். புணர்ந்த பின்பும் இன்பம்.

ஆனால் இந்த பண்புகள் கள்ளுற்கு இல்லை. கள் தனை நினைத்தாலே சிறிது நேர கிளர்ச்சி இருக்கலாம் களிப்பு இருக்காது. அதுப்போல கள் புட்டிகளை கண்டால் எந்தவித ஒரு மகிழ்ச்சியும் இருக்காது. அதுவே கள் தனை உண்டால் மனிதன் மகிழ்ச்சி அடைகிறான். இதுவும் இந்த கள் உடலில் உள்ளவரை மட்டுமே அந்த போதை இருக்கும். மறுநாள் காலை அந்த போதை இருக்காது.

ஆக, புறவயமான தீண்டுதலிலான இன்பங்களும் இருப்பினும், காதல் (காமம்) கொடுக்கும் இன்பம் அகவயமானது. அதனை நினைத்தாலும் கண்டாலும் மகிழ்ச்சி தான். ஆனால் கள் இந்த அகவயமான இன்பங்களை கொடுக்காது. அது வெறும் தற்காலிகமான உடலில் உள்ளவரையிலான புறவயமான இன்பத்தை உண்டால் மட்டுமே தரும்.

மேலும்: அஷோக் உரை

அரசே, இன்று தங்கள் மணநாள் இரவு” என்றாள். ஆமென அவன் தலையசைத்தான். “பிறபெண்டிரை நீ இதுவரை அறிந்ததில்லை என்று அறிவேன்” என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “காமத்தையே உண்மையுருவில் இப்போதுதான் காணப்போகிறாய். உள்ளக்காமம் சொல்லில் படர்ந்து கனவில் ஊடுருவி வளர்ந்து எழுவது. அரசே, ஆனால் அதைவிடவும் பேருருக்கொண்டது உடற்காமம்” என்றாள்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விரைதல் . மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பு அறிவுறுத்தத் தலைமகள் , அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னும் தன்கண்ணே நிகழ்தலான் . இது குறிப்பு அறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.]

(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு. (களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு. கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.

மு.வரதராசனார் உரை
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

No comments:

Post a Comment